ADDED : நவ 26, 2024 01:27 AM

புதுடில்லி: 'ஏர்டெல்' நிறுவனம், 'தி டீச்சர்ஸ் ஆப்' என்ற பெயரில் ஆசிரியர்களுக்கான பிரத்யேக செயலியை உருவாக்கி உள்ளது. 'மொபைல் போன்' வாயிலாக பயன்படுத்தக் கூடிய இந்த செயலியில், கற்பித்தல், எதிர்கால திறன்களை கண்டறிதல் உட்பட ஆசிரியர்களுக்கு தேவையான உள்ளடங்கங்களை வழங்குகிறது.
இந்த செயலியை துவக்கி வைத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பேசியதாவது:
நம் இளைய தலைமுறையின் மனதில் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். அதை எதிர்கால ஆசிரியர்களால் மட்டுமே உருவாக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை புதிய பொருளாதார ஒழுங்கில் பங்கேற்பது மட்டுமின்றி, உலக பொருளாதாரத்தில் புதுமைகளை புகுத்த நம் இளைஞர்களை தயார்படுத்துவதே பெரிய சவாலாக கருதுகிறேன்.
கிராமங்களுக்கு செல்லும்போது என் நம்பிக்கை அதிகரிக்கிறது. அங்குள்ள குழந்தைகளுக்கு கற்றல் மீதுள்ள ஆர்வமும், தீவிர சிந்தனை திறனும் என்னை வியக்க வைக்கிறது. அவர்களின் வேகத்துக்கு ஆசிரியர்களால் ஈடுகொடுக்க முடிகிறதா என்ற அச்சம் எப்போதும் உள்ளது.
அதை ஈடுசெய்யும் அளவுக்கு, ஆசிரியர்களின் கற்பிக்கும் மற்றும் திறமைகளை கண்டறியும் திறனை வளர்க்க வேண்டும். அதற்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

