ADDED : மார் 06, 2024 01:42 AM
புதுடில்லி, 'சைபர்' குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகள் குறித்த உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், பொதுமக்கள் புகார் அளிப்பதற்குமான இரண்டு இணையதளங்களை மத்திய அரசு நேற்று துவங்கியுள்ளது.
'மொபைல் போன்' அழைப்புகள், குறுஞ்செய்திகள், 'வாட்ஸாப்' உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகள், சமூக வலைதளங்கள் வாயிலாக ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும் அப்பாவி பொது மக்களிடம் இருந்து பணத்தை திருடும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றைக் களைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரண்டு இணையதளங்களை தகவல்தொடர்பு துறை உருவாக்கி உள்ளது.
இதை, மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு - தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டில்லியில் நேற்று துவக்கி வைத்தார்.
இதில் முதலாவதாக, 'ஆன்லைன்' மோசடிகள் குறித்து விசாரணை அமைப்புகள், வங்கிகள், 'போன்பே' போன்ற நிதி பரிவர்த்தனை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சமூக வலைதளங்கள், அடையாள அட்டை வழங்கும் ஆணையங்கள் தங்களுக்கு கிடைக்கும் உளவுத் தகவல்களை நிகழ்நேரத்தில் பகிர்ந்துகொள்ள, 'டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்பார்ம்' எனப்படும் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
இதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. மேற்குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள மட்டுமே பயன்படுத்தப்படும்.
அடுத்ததாக, 'சக் ஷூ' என்ற இணைதளம் துவங்கப்பட்டது. இதற்கு ஹிந்தியில் கண் என்று அர்த்தம். தகவல்தொடர்பு துறையின், 'சஞ்சார் சாத்தி' எனப்படும், தகவல்தொடர்பு நண்பன் இணையதளத்தில் இந்த புதிய சேவை இணைக்கப்பட்டுள்ளது.
இதில், தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள், வாட்ஸாப் தகவல்கள் வாயிலாக அரங்கேறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க முடியும்.

