மன நோயாளிகளுக்கு ஆலோசனை 'டெலி மனஸ்' திட்டம் அறிமுகம்
மன நோயாளிகளுக்கு ஆலோசனை 'டெலி மனஸ்' திட்டம் அறிமுகம்
ADDED : அக் 29, 2024 07:48 AM

பெங்களூரு; மனநலப் பிரச்னையால் அவதிப்படும் நோயாளிகள், வீடியோ அழைப்பு மூலம் மனநல நிபுணர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற, நிமான்ஸ் மருத்துவமனை, 'டெலி மனஸ்' என்ற சஹாயவாணியை துவக்கியுள்ளது.
பெங்களூரின் நிமான்ஸ் எனும் தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
குடும்ப பிரச்னை, பொருளாதார நெருக்கடி, கல்வி அழுத்தம், பணி அழுத்தம் உட்பட பல்வேறு காரணங்களால், அனைத்து வயதினரும் மன ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். சமீப ஆண்டுகளாக மன நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தால் அவதிப்படுவோருக்கு உதவும் நோக்கில், 2022ல் நிமான்ஸ் 'டெலி மனஸ்' என்ற இலவச சஹாயவாணியை துவக்கியது.
15 லட்சம் அழைப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
சில சிக்கலான பிரச்னைகளுக்கு, தொலைபேசி அழைப்பு மூலம் தீர்வு காண்பது கஷ்டம். எனவே வீடியோ கால் மூலமாக, மனநல நிபுணர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதி சோதனை முறையில் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் தார்வாடில், நிமான்சின் 'டெலி மனஸ்' யூனிட்கள் தினமும் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இந்த சேவை 20 மொழிகளில் கிடைக்கிறது. இதற்காக சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவி பெறப்படுகிறது.
தற்போது கர்நாடகாவில் துவங்கப்பட்ட, வீடியோ அழைப்பு சேவையை, வரும் நாட்களில் நாடு முழுதும் விஸ்தரிக்க, நிமான்ஸ் திட்டமிட்டுள்ளது.
'டெலி மனஸ்' சஹாயவாணிக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. தினமும் சராசரியாக 3,500 அழைப்புகள் வருகின்றன. 15 முதல் 30 வயது வரையிலானவர்கள், அதிக எண்ணிக்கையில் அழைப்பு விடுத்து, ஆலோசனை பெறுகின்றனர்.
யார், யார்?
மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள், குடும்ப பிரச்னை, கல்வி அழுத்தம் உள்ளவர்கள், தற்கொலை எண்ணத்துக்கு ஆளானவர்கள், போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்கள், நினைவுத்திறன் குறைந்தவர்கள், பொருளாதார நெருக்கடி உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் அழைப்பு விடுக்கின்றனர்.
சிலரின் மன நிலையை தெரிந்து கொள்ள, முகத்தை நேருக்கு நேராக பார்க்க வேண்டும். இதற்கு வீடியோ கால் வசதி, உதவியாக இருக்கும்.
இந்த வீடியோ அழைப்பு சேவை பெற விரும்புவோர், ஸ்மார்ட் போன் மூலம் 14416 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த அழைப்பு, மன நல நிபுணரின் கம்ப்யூட்டருக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும். அவசரம் அல்லது கட்டாய சூழ்நிலை இருந்தால் மட்டுமே, வீடியோ அழைப்பு சேவையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.