இந்திய எல்லைக்குள் ஊடுருவல்; பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கைது
இந்திய எல்லைக்குள் ஊடுருவல்; பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கைது
ADDED : மே 05, 2025 09:35 PM

சண்டிகர்: இந்திய -பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டான்.
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில்,எல்லையில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்றுள்ளான். இதனையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் அவனை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளோம். முகமது ஹுசைன் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பஞ்சாப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காவலில் உள்ளான்.
குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பாகிஸ்தான் கரன்சி மற்றும் பாகிஸ்தான் தேசிய அடையாள அட்டையை மீட்டுள்ளோம்.
இவன் மீது ஒரு போலி ஐடி கார்டு மற்றும் இந்திய குடியுரிமை பற்றிய தவறான விவரங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதற்காக ஒரு பாகிஸ்தான் ரேஞ்சர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், ரேஞ்சர் உளவு பார்க்க அல்லது உளவு நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்திருக்கலாம். தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.