பகலிலேயே விசாரணை நடத்துங்கள் அதிகாரிகளுக்கு ஈ.டி., அறிவுறுத்தல்
பகலிலேயே விசாரணை நடத்துங்கள் அதிகாரிகளுக்கு ஈ.டி., அறிவுறுத்தல்
ADDED : அக் 20, 2024 12:21 AM

புதுடில்லி: பண மோசடி தொடர்பான வழக்கில், 'சம்மன்' அனுப்பப்பட்டவர்களிடம் பகலிலேயே அலுவலக நேரத்திலேயே, விசாரிக்க வேண்டும்; நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது என, விசாரணை அதிகாரிகளுக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு தன்னை வரவழைத்து இரவில் விசாரித்ததாகவும், நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருந்ததாகவும், 64 வயதுடைய ஒருவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், இரவில் துாங்க விடாமல் விசாரிப்பது, நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருப்பது மனித உரிமையை மீறும் செயல் என்றும் கூறியிருந்தது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை தெரிவிக்க, அமலாக்கத் துறைக்கு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, விசாரணை அதிகாரிகளுக்கு, விசாரணை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமலாக்கத் துறை, கடந்த 11ம் தேதி சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பண மோசடி தொடர்பான வழக்குகளில் சம்மன் அனுப்பப்பட்டவர்களிடம், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும். அவர்களை வீணாக காத்திருக்க வைக்கக் கூடாது. மேலும், விசாரணையை அலுவலக நேரத்திலேயே நடத்த வேண்டும்.
விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விசாரணை நீண்ட நேரம் நீடிப்பதை தவிர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
தற்போது டிஜிட்டல் வாயிலாக ஆதாரங்களை அழிப்பது, மாற்றுவது போன்றவற்றுக்கு சாத்தியம் இருப்பதால், முடிந்தவரை விசாரணையை வேகமாக செய்ய வேண்டும். ஒரே நாளில் விசாரணையை முடிக்க முயற்சிக்க வேண்டும்.
வழக்கின் முக்கியத்துவம், தேவையை பொறுத்து, அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். அதற்கு மேல் காத்திருக்க வைக்கக் கூடாது.
இரவில் விசாரணை நடத்த வேண்டுமானால், மேல் அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். எதற்காக இரவில் விசாரிக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.