தடை உத்தரவை மீறி டிராக்டரில் சபரிமலை சென்ற கேரள ஏ.டி.ஜி.பி., சர்ச்சையானதால் விசாரணை துவக்கம்
தடை உத்தரவை மீறி டிராக்டரில் சபரிமலை சென்ற கேரள ஏ.டி.ஜி.பி., சர்ச்சையானதால் விசாரணை துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 02:55 AM
சபரிமலை:கேரள உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்மாநில ஏ.டி.ஜி.பி.அஜித்குமார் டிராக்டரில் சபரிமலை சென்று திரும்பியது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கும் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கும் சரக்குகள் கொண்டு செல்வதற்காக டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆப் சீசனில் சபரிமலைக்கு செல்லும் ஊழியர்கள் இந்த டிராக்டரில் செல்வது வழக்கம். அதுபோல நடை திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் நடை அடைக்கும் தினத்திலும் ஊழியர்கள் மற்றும் போலீசார் டிராக்டர்களில் பயணம் செய்வர்.
கேரள உயர்நீதிமன்றம் இதை தடை செய்திருந்தாலும் மலை ஏறுவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு ஊழியர்கள் ஏற்றி செல்லப்படுகிறார்கள். இந்நிலையில் கடந்த 13ம் தேதி சபரிமலையில் நவக்கிரக கோயில்கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தரிசனத்திற்காக வந்திருந்த கேரள ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் டிராக்டரில் வந்து திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியாகவில்லை என்றாலும் தகவல் வைரலாகிறது. கேரள உயர் நீதிமன்றம் நியமித்துள்ள தனி ஆணையரிடம் இது தொடர்பாக விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.