டில்லியில் வெடித்தது வெடிகுண்டு தான் காலிஸ்தான் தொடர்பு குறித்து விசாரணை
டில்லியில் வெடித்தது வெடிகுண்டு தான் காலிஸ்தான் தொடர்பு குறித்து விசாரணை
ADDED : அக் 22, 2024 01:36 AM

புதுடில்லி, டில்லியில், பள்ளி அருகே நேற்று முன்தினம் வெடித்தது வெடிகுண்டு தான் என்பதை போலீசார் நேற்று உறுதி செய்தனர். இந்த நாச வேலையில் ஈடுபட்டது காலிஸ்தான் பயங்கரவாதிகளா என்பது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
டில்லியில் ரோகிணி என்ற இடத்தின் அருகே உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பள்ளி இயங்கி வருகிறது.
முதற்கட்ட சோதனை
பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே நேற்று முன்தினம் காலை குண்டு வெடித்தது. இதில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. அருகே உள்ள கடைகளின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் சேதமடைந்தன.
வெடி சத்தம், அப்பகுதியில் பல நுாறு மீட்டர்கள் வரை கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசியதாகவும் கூறப்பட்டது.
வெடித்தது வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் பொருளா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு படையினர், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டில்லி போலீசார், சம்பவ இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குண்டு வெடித்த இடத்தில் வெள்ளை நிற பவுடர் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான முதற்கட்ட சோதனையில், தீவிரம் குறைவான வெடிகுண்டு வெடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய நாள் இரவே வெடிகுண்டை வைத்து விட்டு, டைமர் அல்லது ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக காலையில் வெடிக்கச் செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
வெடிகுண்டு வைத்தவர்கள், உயிர் சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளதாகவும், எனவே தான் வீரியம் குறைந்த வெடிகுண்டை வைத்துள்ளதாகவும், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த குண்டு வெடிப்புக்கு, 'ஜஸ்டிஸ் லீக் இந்தியா' என்ற காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
கூலிப்படை
'டெலிகிராம்' தகவல் பரிமாற்ற செயலி வாயிலாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், 'கூலிப்படைகளை பயன்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்களின் குரலை ஒடுக்கலாம் என, கோழை இந்திய ஏஜென்ட்களும், அவர்களின் தலைவர்களும் நினைக்கின்றனர்; இது முட்டாள்தனமான செயல்.
'நாங்கள் உங்கள் அருகில் தான் இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்' என, கூறப்பட்டுள்ளது.
அந்த வீடியோவின் பின்னணியில், 'காலிஸ்தான் வாழ்க' என்ற எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அமைப்பின் விபரங்களை அளிக்கும்படி, 'டெலிகிராம்' நிறுவனத்திடம் டில்லி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.