ஜனாதிபதி கடிதம் அனுப்பிய விவகாரம் ஆக., 19ல் விசாரணை துவக்கம்
ஜனாதிபதி கடிதம் அனுப்பிய விவகாரம் ஆக., 19ல் விசாரணை துவக்கம்
ADDED : ஜூலை 29, 2025 11:20 PM

'மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில், ஜனாதிபதியின் கடிதம் தொடர்பான விசாரணை, ஆக., 19ல் துவங்கும்' என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
அதிரடி மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள், மசோதாக்களுக்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும்' என, அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதற்கு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்தை மனுவாக மாற்றிய தலைமை நீதிபதி, 'இதை அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும்' என, அறிவித்தார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூரியகாந்த், பி.எஸ்.நரசிம்மா, விக்ரம் நாத், ஏ.எஸ்.சந்துருகர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
அதில், 'ஜனாதிபதியின் கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இதில் மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை' என, தெரிவித்துள்ளன.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த தேதிகளில் யார் யாரிடம் விசாரணை நடத்துவது என்ற பட்டியலை அரசியல்சாசன அமர்வு வெளியிட்டது.
அதன்படி, 'முதலில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம். விசாரணையை எதிர்ப்பவர்கள் ஆக., 28, செப்., 2, 3, 9 தேதிகளில் தங்கள் வாதங்களை முன் வைக்கலாம்.
மாற்றம் 'விசாரணையை நடத்தலாம் என்பவர்கள் ஆக., 19, 20, 21 மற்றும் 26 தேதிகளில் வாதிடலாம்' என தெரிவித்தனர்.
'இந்த தேதிகளில் மட்டுமே விசாரணை நடக்கும். இதில் மாற்றம் எதுவும் மேற்கொள்ள முடியாது. ஆக., 12க்குள் வழக்கில் தொடர்புடைய மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -