அறிவியல்பூர்வ சோதனைக்காக சபரிமலையில் தங்க தகடுகள் அகற்றம்; மாதிரிகளை சேகரித்த புலனாய்வு அதிகாரிகள்
அறிவியல்பூர்வ சோதனைக்காக சபரிமலையில் தங்க தகடுகள் அகற்றம்; மாதிரிகளை சேகரித்த புலனாய்வு அதிகாரிகள்
UPDATED : நவ 18, 2025 04:34 AM
ADDED : நவ 18, 2025 04:33 AM

பத்தனம்திட்டா: சபரிமலையில், துவாரபாலகர் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் அறிவியல்பூர்வ ஆய்வுக்காக நேற்று மீண்டும் அகற்றப்பட்டன.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து சென்று, சுவாமி அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.
கோவில் கருவறைக்கு முன்பாக உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள், கடந்த 2019ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பின், மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்டபோது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல், கருவறை கதவில் உள்ள தங்கமும் திருடு போனதாக புகார் கூறப்பட்டது.
கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம் போர்டு முன்னாள் தலைவர் வாசு மற்றும் மூன்று நிர்வாகிகளை கைது செய்தனர்.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, தேவ பிரசன்னத்திற்கு பின், துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோவில் கருவறையின் பிரதான கதவுகளில் உள்ள தங்க தகடுகள் நேற்று மதியம் உச்ச பூஜைக்கு பின் நடை அடைக்கப்பட்டதும் அகற்றப்பட்டன. அவற்றை மற்றொரு அறைக்கு எடுத்துச் சென்ற சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், எடையை சோதித்து பார்த்து குறித்துக் கொண்டனர்.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தங்க தகடுகளில் உள்ள தங்கத்தின் துாய்மை, தரம் ஆகியவற்றை கண்டறிய, அதன் மாதிரிகளையும் சேகரித்துக் கொண்டனர். அதேபோல், செப்பு தகடுகளின் தடிமன் பற்றி அறியவும், அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதை வைத்து, தடயவியல் மற்றும் அறிவியல்பூர்வ சோதனை நடக்கவுள்ளது. இதில் கண்டறியப்படும் தகவல்களை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

