'ஆரோவில்லில் நடக்கும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்'
'ஆரோவில்லில் நடக்கும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்'
ADDED : ஆக 06, 2024 05:06 AM

புதுடில்லி: 'ஆரோவில் சர்வதேச நகரத்தில் போதைப் பொருள் புழக்கம், சைபர் க்ரைம் குற்றம் போன்றவை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி - தமிழக எல்லையில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லோக்சபாவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, மத்திய கல்வி அமைச்சக இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அவர் அதில் கூறியுள்ளதாவது: புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு நில ஆக்கிரமிப்பு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு, கருப்பு பண புழக்கம், தரவு திருட்டு உள்ளிட்ட பல குற்றங்கள் நடப்பதாக, ஆரோவில் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சமூக நல அமைப்பினரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.
இதில், சைபர் க்ரைம் குற்றங்கள் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் குறித்த புகார்கள், அந்தந்த புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் விசாரணையை விரைவில் துவங்குவர். நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள், ஆரோவில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க தகுந்த அதிகாரியை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியின் பரிந்துரையின் அடிப்படையில், 1968ல் ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில், 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் அங்கேயே தங்கி, பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.