வெளியானது ஐ.பி.எல் அட்டவணை: முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்
வெளியானது ஐ.பி.எல் அட்டவணை: முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்
UPDATED : பிப் 22, 2024 05:50 PM
ADDED : பிப் 22, 2024 05:38 PM

சென்னை: இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள துவக்கப் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 17வது சீசனும், 18வது லோக்சபா தேர்தலும் (ஏப்., - மே மாதங்களில்) ஒரே சமயத்தில் நடக்க உள்ளன. இதனால் ஐ.பி.எல்., தொடர் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. 2009ல் லோக்சபா தேர்தல் காரணமாக தென் ஆப்ரிக்காவில் நடந்தது. 2014ல் தேர்தல் நடந்ததால், பாதி போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு மாற்றப்பட்டன. கொரோனா காலத்தில்(2020, 2021) போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தன.
2019ல் லோக்சபா தேர்தலுடன் ஐ.பி.எல்., தொடரும் இந்தியாவில் நடந்தது. இதே போல இம்முறையும் இந்தியாவில் போட்டிகள் நடக்க உள்ளன. சென்னை, குஜராத், மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் 21 போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, துவக்க போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புக்கு பிறகு மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.