அணுசக்தி முகமையுடன் ஒத்துழைப்பு கூடாது: ஈரான் அதிபர்
அணுசக்தி முகமையுடன் ஒத்துழைப்பு கூடாது: ஈரான் அதிபர்
ADDED : ஜூலை 03, 2025 01:31 AM
துபாய்: ஐ.நா., சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமைக்கு அளித்து வந்த ஒத்துழைப்பை நிறுத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் நேற்று உத்தரவிட்டார்.
மேற்காசிய நாடான ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அதே பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இன்னும் சில மாதங்களில் அணு ஆயுதத்திற்கான 90 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அந்நாடு அடையும் என கூறியது.
இதன் காரணமாக ஈரானின் அணுசக்தி வளாகங்களை குறிவைத்து இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி, போர்தோ எனும் முக்கிய அணுசக்தி வளாகத்தை தகர்த்தது.
ஈரானும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தந்தது. அதன் பின் 12 நாட்கள் நடந்த போரை அமெரிக்கா தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், தங்கள் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் காரணமாக, சர்வதேச அணுசக்தி முகமைக்கு கொடுத்து வந்த ஒத்துழைப்பை நிறுத்தும் சட்ட மசோதா சமீபத்தில் ஈரான் பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டத்தை அமல்படுத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.