காங்., கோட்டையில் இரும்பு மனிதர் சுரேஷ் பா.ஜ., - ம.ஜ.த.,வின் திட்டம் சாத்தியப்படுமா?
காங்., கோட்டையில் இரும்பு மனிதர் சுரேஷ் பா.ஜ., - ம.ஜ.த.,வின் திட்டம் சாத்தியப்படுமா?
ADDED : பிப் 28, 2024 06:14 AM

பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுரேஷ். இவர், கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர். அண்ணன் எட்டு அடி பாய்ந்தால், தம்பி 16 அடி பாய்கிறார் என்ற பழமொழிக்கு ஏற்ப செயல்படுவர் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுபவர்.
இவர், 2013ல் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், முதன்முறையாக எம்.பி.,யானார். அதன் பின், 2014, 2019 என அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றி பெற்றார். குறிப்பாக, 2019ல் மாநிலத்தின் 28 தொகுதிகளிலேயே, அவர் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஆவார்.
உற்சாகம்
இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு சுரேஷ் முடிவு செய்துள்ளார். தேர்தல் பணிகளை ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ள அவர், தொகுதியில் நடக்கின்ற கட்சித் தொண்டர்களின் விழாக்களில் பங்கேற்று உற்சாகப்படுத்தி வருகிறார்.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால், தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியை வாரி வாரி தந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக சிவகுமார் சகோதரர்கள் ஆதிக்கம் செலுத்தி, தங்களின் இரும்புக்கோட்டையாக வைத்துள்ளனர் என்றே சொல்லலாம். பா.ஜ.,வின் முனிராஜு கவுடா, அஸ்வத் நாராயணகவுடா ஆகியோர் இதற்கு முன்பு, சுரேஷுக்கு எதிராக போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தனர்.
தொகுதியில், துணை முதல்வரின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தரப்பில் யாரை களமிறக்குவது என்று அக்கட்சி தலைவர்கள் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இத்தனை தடைகளையும் மீறி வெல்லப் போகும் வேட்பாளரை பா.ஜ., அடையாளம் காண வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த ஒரு தொகுதியை எப்படியாவது தங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சி மேலிடமும் மாநில தலைவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆலோசனை
தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருக்கும் ம.ஜ.த.,வுக்கும் ஓரளவு செல்வாக்கு இருப்பதால், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர். இதனால், வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்னர், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
தம்பியை வெற்றி பெற வைப்பதற்காக, சிவகுமார் தரப்பில் ஏற்கனவே மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அதுவும் இந்த முறை, மாநிலத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொகுதியை பொறுத்த வரையில், மாநில தலைநகர் பெங்களூரை ஒட்டியிருப்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுரேஷுக்கு எதிராக யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

