ADDED : அக் 27, 2024 11:10 PM
பெங்களூரு: பாபுசாப்பாளையாவில், கட்டடம் இடிந்து ஒன்பது பேர் பலியான சம்பவத்துக்கு பின், விழித்து கொண்ட மாநகராட்சி சட்டவிரோத கட்டடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இன்று ஆய்வு துவங்குகிறது.
பெங்களூரின், பாபுசாப்பாளையாவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது. இதில் ஒன்பது பேர் பலியாகினர். கட்டட பணிகள் தரமாக இல்லாததே, அசம்பாவிதத்துக்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்தது.
இரண்டு மாடிகளுக்கு அனுமதி பெற்று, சட்டவிரோதமாக நான்கைந்து மாடிகள் கட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஒன்பது பேர் பலியான பின், பெங்களூரு மாநகராட்சி விழிப்படைந்துள்ளது. நகர் முழுதும் கட்டடங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இன்று முதல் ஆய்வு துவங்கவுள்ளது.
கட்டட உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் வரைபட முறைப்படி கட்டடங்கள் கட்டப்படுகிறதா இல்லையா என்பது ஆய்வு செய்யப்படும். சட்டவிரோத கட்டடங்களுக்கு சீல் வைக்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
'அதேபோன்று இடியும் நிலையில் உள்ள பழைய கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும். இத்தகைய கட்டடங்களில் வசிப்போர், வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.