ஆதிஷி தற்காலிக முதல்வரா? துணைநிலை கவர்னர் வருத்தம்!
ஆதிஷி தற்காலிக முதல்வரா? துணைநிலை கவர்னர் வருத்தம்!
ADDED : டிச 31, 2024 06:17 AM

புதுடில்லி : 'உங்களை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்தது, என்னை மிகவும் காயப்படுத்தியது' என, டில்லி முதல்வர் ஆதிஷிக்கு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கடிதம் எழுதி உள்ளார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்த முன்னாள் முதல்வரும், ஆளும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'சட்டசபை தேர்தலில் வென்று மக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆவேன்' என, சபதமிட்டு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதிஷி முதல்வராக பதவியேற்றார். டில்லியில் வரும் பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாம் களைகட்டி உள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷியை தற்காலிக முதல்வர் என அழைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஆதிஷிக்கு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று எழுதிய கடிதம்:
சில நாட்களுக்கு முன், உங்களை தற்காலிக முதல்வர் என, அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாக அழைத்தது, எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இது போன்ற வார்த்தைகளால், என்னை கவர்னராக நியமித்த ஜனாதிபதியையும், உங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த என்னையும் அவர் அவமதித்து விட்டார்.
இது, உங்களுக்கு மட்டுமல்ல, ஜனாதிபதிக்கும், எனக்கும் தான் அவமதிப்பு. தற்காலிக முதல்வர் என்ற விளக்கம் அரசியலமைப்பில் இல்லை. என் இரண்டரை ஆண்டு கால பதவியில், முதன்முறையாக, முதல்வர் பதவியில் வேலை செய்யும் ஒருவரை பார்த்தேன்.
உங்கள் கட்சி தலைவர் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது ஒரு துறையை கூட கவனிக்கவில்லை; கோப்புகளில் கூட அவர் கையெழுத்திடவில்லை. ஆனால் நீங்கள் அப்படியில்லை. அவரை விட பன்மடங்கு சிறப்பாக பணியாற்றுகிறீர்கள். பல்வேறு துறைகளுக்கு பொறுப்பேற்று நிர்வாகத்தின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்கிறீர்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.