
பெங்களூரு; ''முதல்வர் சித்தராமையா பதவிக்காலம் எப்போது நிறைவு பெறும் என்று கணிப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஜோதிடரா,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எனது கணிப்பின்படி முதல்வர் சித்தராமையாவின் பதவிக்காலம் நவம்பர் 15 அல்லது 16ம் தேதியுடன் முடியும் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறி உள்ளார். இப்படி கணித்து சொல்ல அவர் என்ன ஜோதிடரா. அவர் எப்போதும் ஜோதிடம் சொல்ல கற்று கொண்டார் என்று எனக்கு தெரியவில்லை.
சித்தராமையாவை முதல்வராக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சேர்ந்து தேர்வு செய்தோம். அவர் தான் ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார் என்று நினைத்தோம்.
இரண்டரை ஆண்டுகள் மட்டுமே சித்தராமையா பதவியில் இருப்பார் என்று மேலிடம் எங்களிடம் கூறவில்லை. ஆனால் மேலிடம் என்ன முடிவில் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை.
முதல்வரின் அரசியல் ஆலோசகர் பதவியை பி.ஆர்.பாட்டீல் ஏன் ராஜினாமா செய்தார் என்று தெரியவில்லை. அதுபற்றி அவர் தான் கூற வேண்டும்.
நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்து உள்ளது. கூடிய விரைவில் மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அவர் ஒப்புதல் அளித்த பின், உடனடியாக சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவோம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உப்பு, காரம் எதுவும் இல்லை. நமது மாநிலத்திற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பல முக்கிய கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து இருந்தோம். அதை அவர்கள் கருத்தில் எடுத்து கொள்ளவில்லை.
மேகதாது திட்டம் பற்றி எதுவும் பேசவில்லை. பெங்களூரு வளர்ச்சிக்கு எதுவும் கொடுக்கவில்லை. டில்லிக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன். ஆனால் அரசியல் காரணங்களுக்கு அல்ல. அரசியல் பேச வேண்டும் என்றால் மேலிட பொறுப்பாளர்கள் இங்கு வரும் போது பேசி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

