நெருக்கடி தந்தாரா சித்தராமையா? 'முடா' தலைவர் திடீர் ராஜினாமா!
நெருக்கடி தந்தாரா சித்தராமையா? 'முடா' தலைவர் திடீர் ராஜினாமா!
ADDED : அக் 17, 2024 01:50 AM

மைசூரு :கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான மரிகவுடா, 'முடா' தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றச்சாட்டு கூறியது.
முதல்வர் சித்தராமையா, தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, முடாவில் இருந்து மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் வாங்கிக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், சித்தராமையா மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளன. இதனால், சித்தராமையாவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது.
சித்தராமையாவின் இந்த நிலைக்கு, அவரது நெருங்கிய நண்பரும், முடா தலைவருமான மரிகவுடா தான் காரணம் என்று, முதல்வரின் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். மரிகவுடாவை வசைபாட ஆரம்பித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு விகாஸ் சவுதாவில், நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய செயலர் தீபா சோழனை, மரிகவுடா நேற்று சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
முடாவில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடக்கிறது. முறைகேடு பற்றி என்னிடம் எந்த தகவலும் இல்லை. யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. உடல்நலக் குறைவால் முடா தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன்.
முதல்வர் சித்தராமையா எங்கள் தலைவர். அவருடன் 40 ஆண்டுகள் இருந்துள்ளேன். முதலில் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தலைவராக என்னை நியமித்தார்.
அவர் கூறியதன்படி பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.