செலுத்த வேண்டியதை விட 2 மடங்கு பணம் வசூலிப்பதா? மல்லையா புலம்பல்
செலுத்த வேண்டியதை விட 2 மடங்கு பணம் வசூலிப்பதா? மல்லையா புலம்பல்
ADDED : டிச 20, 2024 02:51 AM

புதுடில்லி,:'அமலாக்கத் துறையும், வங்கிகளும் நான் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு இரு மடங்கிற்கு மேல் பணம் எடுத்துள்ளனர், அதை திரும்ப பெற எனக்கு உரிமை உண்டு' என, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பேசுகையில், 'வங்கிகளை மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று, அவர் கடன் பெற்ற வங்கிகளுக்கு 14,131 கோடி ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது' என்றார்.
இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பெற்ற கடன் வட்டியுடன் சேர்த்து 6,203 கோடி ரூபாய் என, கடன் வசூல் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. வங்கிகள், அமலாக்கத் துறை வாயிலாக என்னிடமிருந்து 14,131 கோடி ரூபாயை மீட்டுள்ளதாக நிதியமைச்சர் பார்லிமென்ட்டில் அறிவித்துள்ளார். ஆனால் இன்னமும் நான் ஒரு பொருளாதார குற்றவாளி.
அமலாக்கத் துறையும், வங்கிகளும் இரண்டு மடங்குக்கு மேல் கடன் தொகையை எப்படி எடுத்தனர் என்பதை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்த முடியாவிட்டால், அந்த பணத்தை திரும்ப பெற எனக்கு உரிமை உண்டு.
என்னை விமர்சிப்பவர்கள், என் மீது சி.பி.ஐ., கிரிமினல் வழக்கு இருப்பதாக கூறுவர். நான் 1 ரூபாய் கூட திருடியதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.