கேரள பா.ஜ.,வில் நிர்வாகிகளை மாற்றினால் மட்டும் போதுமா?
கேரள பா.ஜ.,வில் நிர்வாகிகளை மாற்றினால் மட்டும் போதுமா?
ADDED : ஜூலை 20, 2025 11:36 PM

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.
இதையடுத்து, அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. வட மாநிலங்களில், தொடர் வெற்றியை பதித்து வரும் பா.ஜ., கேரளாவில், வரும் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
ஹிந்துக்களை மட்டுமின்றி அங்குள்ள சிறுபான்மையினரையும் கவரும் முயற்சியில் இறங்கியுள்ள பா.ஜ.,வுக்கு, இடதுசாரி கட்சிகளும், காங்கிரசும் போட்டியாக உள்ளன. அதை முறியடிப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பின்னடைவு
இதன் ஒரு பகுதியாக, பா.ஜ., நிர்வாகிகள் பட்டியலில் மாற்றத்தை அக்கட்சி செய்துள்ளது. பிரபல தொழிலதிபரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர், பா.ஜ.,வின் மாநில தலைவராக கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ராஜிவ் சந்திரசேகருக்கு, புதிய பொறுப்பை பா.ஜ., தலைமை வழங்கியுள்ளது.
புதிய தலைமுறை வாக்காளர்களுக்கு, வளர்ச்சியின் முகமாக அவர் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு துணை தலைவராக ஷான் ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எம்.டி. ரமேஷ், ஷோபா சுரேந்திரன், சுரேஷ், சுனில் அந்தோணி ஆகியோர் பொதுச் செயலர்களாக தேர்வாகியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., பின்புலம் இல்லாத ஒருவர், பா.ஜ.,வின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டது, ஒரு வகையில் அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், கேரளாவை பொறுத்தவரை அது பலமாகவே பார்க்கப்படுகிறது.
அதேசமயம், ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த வீ.முரளிதரனின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு, மற்றொரு முன்னாள் தலைவரான கிருஷ்ணதாசின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதும், அக்கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது.
என்ன காரணம்?
கேரளாவில், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓட்டு சதவீதம் 10.3 ஆக இருந்தது.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், இது 19.2 சதவீதமாக அதிகரித்தது. இந்த சீரிய வளர்ச்சி, வரும் சட்டசபை தேர்தலில் ஒரு சில இடங்களைப் பிடிக்க வாய்ப்பாக இருக்கும் என அக்கட்சி தலைமை நம்புகிறது.
இருந்தாலும், கேரளாவில் ஆட்சி அதிகாரத்தில் அமரும் நோக்கிலேயே புதிய நிர்வாகிகளை, பா.ஜ., தலைமை தேர்வு செய்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இங்கு, பெரும்பான்மையாக உள்ள நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பட்டியலில் முன்னுரிமை கொடுத்திருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இது குறித்து நாயர் சர்வீஸ் சொசைட்டி நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'சமீபகாலமாக, மாநிலத்தில் உள்ள நாயர் சமூகத்தினர் பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். நாடு முழுதும் உள்ள கோவில் நிர்வாக விஷயங்களில், பிரதமர் மோடி காட்டும் ஆர்வமே இதற்கு காரணம்.
உத்தரவு
'சபரிமலை கோவிலுக்குள் பெண்களை நுழைய அனுமதிப்பது உட்பட பல்வேறு விவகாரங்களில் பினராயி விஜயனின் அரசின் நிலைப்பாட்டை கணிசமான ஒரு பகுதியினர் எதிர்க்கின்றனர். இந்த அதிருப்தி, பா.ஜ-.,வுக்கு சாதகமாக அமைகின்றன' என்றார்.
சட்டசபை தேர்தலுக்கு, மேலும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், புதிய நிர்வாகிகள் வாயிலாக ஒரு எழுச்சியை ஏற்படுத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிர்வாகிகள் மாற்றம், பா.ஜ., காலுான்ற உதவுமா என்பது, அக்கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளே முடிவு செய்யும். வெறும் நிர்வாகிகளை மட்டும் மாற்றினால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது பா.ஜ., தலைமைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நம்பலாம்.
- நமது சிறப்பு நிருபர் -