சிவகுமாருக்கு ஆப்பு வைத்த அமைச்சர் ஜமீர் அகமது கான்?
சிவகுமாருக்கு ஆப்பு வைத்த அமைச்சர் ஜமீர் அகமது கான்?
ADDED : நவ 20, 2024 12:27 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. கட்சியின் தலைவர் சிவகுமார், துணை முதல்வராக உள்ளார். இவருக்கு முதல்வர் பதவி மீது கொள்ளை ஆசை.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கட்சி வெற்றி பெற்றதும், எப்படியாவது முதல்வர் பதவி வாங்கி விட வேண்டும் என்று, மேலிடத்திடம் முட்டி மோதி பார்த்தார். ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சித்தராமையா முன்பு, அவர் ஆட்டம் எடுபடவில்லை.
திண்ணை காலி
இந்நிலையில், 'முடா' வழக்கில் சித்தராமையா மீது வழக்கு பதிவானதும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் முதல்வர் ராஜினாமா செய்ய மறுக்கிறார்.
ஒருவேளை அவர் பதவியை துறந்தால், இம்முறை பதவியை கெட்டியாக பிடிக்க வேண்டும் என்பதில் சிவகுமார் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார்.
முடா வழக்கில் முதல்வருக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறினாலும், 'அண்ணன் எப்போது போவார்; திண்ணை எப்போது காலியாகும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, சித்தராமையா எப்போது செல்வார்; அவரது நாற்காலியில் நாம் அமர்ந்து விடலாம் என்று சிவகுமார் காத்து இருக்கிறார்.
முதல்வர் பிரசாரம்
இந்நிலையில், சிவகுமாரின் சொந்த மாவட்டமான ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தொகுதியில் காங்கிரஸ், கடைசியாக 2008ல் வெற்றி பெற்றது. தற்போது சிவகுமாரின் அரசியல் எதிரியான குமாரசாமி ராஜினாமாவால் இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் சிவகுமார் முனைப்பு காட்டினார்.
முதலில் சென்னப்பட்டணா தொகுதியில் சிவகுமாரை போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் யோகேஸ்வர் வேட்பாளராக களம் இறங்கினார்.
அவருக்கு ஆதரவாக முதல்வர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சிவகுமாருக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு வரும் என அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பேச ஆரம்பித்தனர்.
அரசியல் களத்திலும் இதே வார்த்தை எதிரொலித்தது. இது முதல்வர் தரப்பினரை கோபமடைய செய்தது.
ஒக்கலிக ஓட்டுகள்
இந்நிலையில் சென்னப்பட்டணாவில் பிரசாரம் செய்த முதல்வரின் ஆதரவு அமைச்சரான ஜமீர் அகமது கான், மத்திய அமைச்சர் குமாரசாமியை தேவையில்லாமல், 'கருப்பர்' என்று விமர்சித்தார்.
இதனால் சிவகுமார், குமாரசாமி சார்ந்த ஒக்கலிக சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வேட்பாளர் யோகேஸ்வரும், ஜமீரின் கருத்தால் அதிருப்தி அடைந்தார். ஒக்கலிக சமூக ஓட்டுகள் பிரிந்து இருக்கலாம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஜமீரின் கருத்தை சிவகுமாரும் கண்டித்தார். ஆனால், அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ஜமீர், 'என் மனதில் தோன்றியதை பேசினேன். இதற்காக நான் கவலைப்பட மாட்டேன்' என்று தடாலடியாக கூறினார்.
ஜமீரின் கருத்து குறித்து அரசியல் அரங்கில் ஆராய்ந்த போது, சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சிவகுமாருக்கு முதல்வராகும் வாய்ப்பு வரும்.
இந்த வாய்ப்பை தடுப்பதற்காகவே அவர் இப்படி பேசி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ, வரும் 23ம் தேதி சென்னப்பட்டணாவில் யார் கழுத்தில் வெற்றி மாலை விழும் என்று தெரிந்துவிடும்.
-- நமது நிருபர் - -