முதல்வர் முன் சரணடைவது தவறா? பா.ஜ.,வுக்கு பரமேஸ்வர் கேள்வி!
முதல்வர் முன் சரணடைவது தவறா? பா.ஜ.,வுக்கு பரமேஸ்வர் கேள்வி!
ADDED : ஜன 10, 2025 07:18 AM

பெங்களூரு: ''முதல்வர் முன்பு நக்சல்கள் சரண் அடைய கூடாதா,'' என்று, பா.ஜ.,வுக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா முன்பு ஆறு நக்சல்கள் சரண் அடைந்தனர். அவர்கள், தற்போது நக்சல் ஒழிப்பு படையினர் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
நக்சல்கள் சரண் அடையும்போது ஆயுதங்கள் எதையும் எடுத்து வரவில்லை. ஆயுதங்களை என்ன செய்தனர் என்று தகவல் இல்லை. ஆயுதங்களை மீட்பது தொடர்பாக கொப்பால் டி.எஸ்.பி., பாலாஜி சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
கர்நாடகா 99 சதவீதம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறி உள்ளது. தமிழகம், கேரளா மாநிலங்களைச் சேர்ந்த நச்சல்களும் நம்மிடம் சரண் அடைந்துள்ளனர். அந்த மாநில முதல்வர்களுடன் நமது முதல்வர் பேசுவார். அந்த மாநிலங்களிலும், அவர்கள் மீது வழக்கு உள்ளது.
சரண் அடைந்தவர்களை, நகர நக்சல்களாக மாற்ற முயற்சி நடப்பதாக, பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுனில்குமார் கூறியிருப்பது சரியல்ல.
முதல்வர் முன்னிலையில் நக்சல்கள் சரண் அடைந்ததை பா.ஜ., விமர்சித்து உள்ளது. முதல்வர் முன்பு சரண் அடைந்ததில் என்ன தவறு உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. எங்களிடம் எந்த அதிருப்தியும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். துணை முதல்வர் சிவகுமார் தமிழக கோவில்களுக்கு ஏன் செல்கிறார் என்று எனக்கு தெரியாது.
எஸ்.சி., -- எஸ்.டி., சமூக எம்.எல்.ஏ.,க்களுக்கு நான் அழைத்த இரவு விருந்து ரத்து ஆகவில்லை. தேதியை ஒத்திவைத்து உள்ளோம். எங்களது விருந்தில் மேலிட தலைவர்கள் சிலரும் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

