லோக் ஆயுக்தா ரகசியம் கசிகிறதா? கர்நாடக அரசுக்கு கவர்னர் கேள்வி!
லோக் ஆயுக்தா ரகசியம் கசிகிறதா? கர்நாடக அரசுக்கு கவர்னர் கேள்வி!
ADDED : செப் 21, 2024 07:06 AM

பெங்களூரு: 'மத்திய அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த, லோக் ஆயுக்தா என்னிடம் அனுமதி கேட்டது பற்றி, கர்நாடக அரசுக்கு எப்படி தெரியும்?' என தலைமைச் செயலருக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடிதம் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மைசூரு மூடாவில் மனைவி பார்வதிக்கு சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடந்த மாதம் 16ம் தேதி அனுமதி வழங்கினார்.
இதையடுத்து மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ் நிரானி, ஜனார்த்தன ரெட்டி, சசிகலா ஜொல்லே ஆகியோர் மீதான ஊழல் முறைகேடு குறித்து விசாரிக்க, லோக் ஆயுக்தாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, கவர்னரிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்.
கடந்த மாதம் 22ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் குமாரசாமி, மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் கவர்னருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் குமாரசாமி, மூன்று பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தா அனுமதி கேட்ட கோப்பு எதுவும் நிலுவையில் இல்லை என, கவர்னர் அலுவலகம் கூறி இருந்தது.
கர்நாடக தலைமைச் செயலர் ஷாலினிக்கு, கவர்னர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் குமாரசாமி, மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த, கவர்னருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவு செய்தது பற்றி பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன்.
லோக் ஆயுக்தா என்னிடம் கோரிக்கை வைத்தது மாநில அரசுக்கும், அமைச்சரவைக்கும் எப்படி தெரியும்? லோக் ஆயுக்தா ஒரு சுதந்திரமான அமைப்பு. அந்த அமைப்பு வேறு யாரிடமாவது ரகசிய விஷயங்களை பகிர்ந்து உள்ளதா என்பது பற்றி அரசு பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.