ADDED : ஜன 16, 2025 07:28 PM

மும்பை: '' நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மட்டும் வைத்துக் கொண்டு, மும்பை பாதுகாப்பு இல்லாத நகரம் எனக்கூறுவது தவறு,'' என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.
மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வந்த பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் வீட்டில் நேற்று புகுந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் தாக்கினான். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவனை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவனை பிடிக்க 10 தனிப்படைகளை அமைத்து உள்ளனர்.
இது தொடர்பாக டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: முன்பு, சல்மான் கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். பெரிய நட்சத்திரங்களுக்கே அரசால் பாதுகாப்பு தரவில்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? இரட்டை இன்ஜின் அரசு சிறந்த நிர்வாகத்தையோ அல்லது மக்களுக்கு பாதுகாப்பையோ வழங்கவில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
இதற்கு பதிலளித்து மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் கூறியதாவது: இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும். இவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இதற்காக மும்பை பாதுகாப்பு இல்லாத நகரம் எனக்கூறுவது தவறு. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் மும்பை மிகவும் பாதுகாப்பான நகரம். இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.