UPDATED : ஆக 03, 2025 08:22 AM
ADDED : ஆக 03, 2025 04:11 AM

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாக்., விமானப்படை தளங்களை, அழித்தது இந்தியா. இப்படி அழிக்கப்பட்ட முகாம்கள், தற்போது மீண்டும் புனரமைக்கப்படுகின்றன; இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறதாம்.
பாக்., ராணுவ தலைவர் ஜெனரல் ஆசிம் முனீர், சமீபத்தில் சீனா சென்று, முக்கிய தலைவர்களை சந்தித்து உள்ளார். இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுக்கு ஆதரவாக வரிகளைக் குறைத்து, இந்தியாவிற்கு அதிகப்படுத்தி உள்ளார்.
சீனாவிலிருந்து ராணுவ தளவாடங்கள், உலக வங்கியில்இருந்து கடன், துருக்கியிலிருந்து டிரோன்கள் என, பாகிஸ்தான் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்ப, பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு, காஷ்மீரிலும் பல முகாம்கள் மீண்டும் முளைத்துள்ளன; இதில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., தீவிரமாக இறங்கியுள்ளது.
பயங்கரவாத அமைப்பான, ஜெய்ஷ் - இ - முகமதுவின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானின் பல இடங்களில் கூட்டம் நடத்தி ஆதரவைத் தேடுவதுடன், தன் ஆதரவாளர்களிடமிருந்தும் நன்கொடையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
'இந்தியா மீது, சீனா மறைமுக தாக்குதலை, பாகிஸ்தான் வாயிலாக நடத்த, தகுந்த சமயத்திற்காக காத்திருக்கிறது' என, சொல்லப்படுகிறது. 'அப்படி பாகிஸ்தான் நம் நாட்டை தாக்கினால், அந்த நாடு பீஸ் பீஸாகிவிடும்' என்கின்றனர், இந்திய ராணுவ தலைவர்கள்.

