அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி வெற்றியா, தோல்வியா?: கேரளாவில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி வார்த்தை போர்
அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி வெற்றியா, தோல்வியா?: கேரளாவில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி வார்த்தை போர்
UPDATED : செப் 22, 2025 04:53 AM
ADDED : செப் 22, 2025 12:51 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், உலகளாவிய அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., எதிர்க்கட்சியான காங்., இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் ச பரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
1,000 கோடி ரூபாய் உலக பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு, இக்கோவிலை நிர்வகித்து வருகிறது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவையொட்டி, பம்பா நதிக்கரையில் உலகளாவிய அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி, கேரள அரசு சார்பில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட, 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், 'சபரிமலை வளர்ச்சிக்காக, 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும், என அறிவித்தார்.
இந்நிலையில், உலகளாவிய அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி வெற்றியா, தோல்வியா என்பது தொடர்பாக, ஆளும் மார்க்.கம்யூ., எதிர்க்கட்சி காங்., இடையே வார்த்தை போர் துவங்கி உள்ளது.
மகிழ்ச்சி கேரள மார்க்.கம்யூ., செயலர் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ''3,000 பேர் வருவர் என, எதிர்பார்த்தோம். ஆனால், 4,600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
''செ யற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி, சில ஊடகங்கள் வேண்டுமென்றே பொய் பரப்புகின்றன,'' என்றார்.
முற்றிலும் தோல்வி! அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்பட்ட அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி கேலிக்கூத்தாக மாறி தோல்வி அடைந்து விட்டது. பெரும்பாலான அமர்வுகளில் காலி இருக்கைகளே இருந்தன. இதை செய்தி சேனல்களில் பார்த்தோம். தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்ட அரசியல் நாடகம் என்பதை உணர்ந்து, அய்யப்ப பக்தர்கள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர். வி.டி.சதீஷன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்.,