ADDED : ஆக 10, 2025 07:34 AM

புதுடில்லி: டாஸ்மாக் விவகாரம் உட்பட தமிழகத்தின் பல ஊழல் வழக்குகளில், மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தி, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில், துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பர்கள் உட்பட தி.மு.க.,வின் பல முக்கிய பிரமுகர்கள் கைதாவர் என, எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அத்துடன், 'அமலாக்கத்துறை தமிழக விவகாரங்களில் அமைதியாக உள்ளது. தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் மறைமுக உறவா?' என, கேள்விகள் எழுந்துள்ளன.
'உச்ச நீதிமன்றம், பல வழக்குகளில் அமலாக்கத் துறையை கண்டித்துள்ளது. இதனால் தான் அமலாக்கத்துறை தற்போது அடக்கி வாசிக்கிறது. மேலும், டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக் கோரும் மனு நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் தான் அடக்கி வாசிக்கிறது அமலாக்கத்துறை' என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
இதற்கிடையே, டில்லி அரசியல் வட்டாரங்களில் வேறொரு விஷயமும் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில், பிரதமர் மோடியை கனிமொழி, கமல், துரை வைகோ ஆகியோர் சந்தித்துள்ளனர். அமெரிக்க வரி விதிப்பு உட்பட பல விவகாரங்களில் படு பிசியாக உள்ள பிரதமர், நேரம் ஒதுக்கி இவர்களைச் சந்தித்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்துள்ளார். இதெல்லாம் வைத்து பார்க்கும்போது, 'உள்ளுக்குள் ஏதோ நடக்கிறது' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

