ஆந்திராவில் ஜெகன் ஆட்சியின் போது கல்லீரல் நோயாளிகள் அதிகரிப்பு: தரமற்ற மது விற்பனை காரணமா?
ஆந்திராவில் ஜெகன் ஆட்சியின் போது கல்லீரல் நோயாளிகள் அதிகரிப்பு: தரமற்ற மது விற்பனை காரணமா?
ADDED : மே 12, 2025 12:41 AM

அமராவதி: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்தபோது, மது பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு நோய், 100 சதவீதம் அதிகரித்ததாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2019 - 24 வரை, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.,காங்., ஆட்சியில் இருந்தது. அப்போது, மது விற்பனையில், 3,200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் நண்பர் ராஜ்காசி ரெட்டி கைது செய்யப்பட்டுஉள்ளார். அந்த கால கட்டத்தில், உள்ளூர் மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்று, அந்நிறுவனங்களின் தரமற்ற மது வகைகளை மட்டுமே கடைகளில் அதிகம் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
தேசிய அளவில் பிரபலமான நிறுவனங்களின் மது வகைகளை கொள்முதல் செய்யாமல், அரசு இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜெகன் மோகன் முதல்வராக இருந்த காலகட்டத்தில், மது பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை மாநில அரசு அமைத்தது.
இந்த குழு ஆய்வு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர சுகாதார துறையின் சிறப்பு தலைமை செயலர் கிருஷ்ண பாபு கூறியதாவது:
கடந்த 2014 - 19ம் ஆண்டை விட 2019 - 24 கால கட்டத்தில், கல்லீரல் மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆந்திராவில் அதிகரித்துள்ளது.
மது பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2014 - 19ல் 14,026 ஆக இருந்தது. அது, 2019 - 24ல் 100 சதவீதம் அதிகரித்து, 29,369 ஆக உயர்ந்துள்ளது.
மது பழக்கத்தால் ஏற்படும் நரம்பியல் பாதிப்புகளும், 2014 - 19ல் இருந்ததை விட, 2019 - 24ல் 892 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் தரம் குறைந்த மதுபானங்களை விற்பனை செய்து, அதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் நிபுணர் குழு விசாரித்து வருகிறது.