ADDED : ஜன 19, 2025 06:56 AM

தட்சிண கன்னடா: ''மங்களூரு காத்தாடி திருவிழா, விளையாட்டுப் போட்டியாக மாற்ற வாய்ப்பு உள்ளது,'' என, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு தண்ணீர்பாவி கடற்கரையில் நேற்று சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை, மாவட்ட பொறுப்பு வகிக்கும் சுகாதார துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் துவக்கிவைத்தார்.
அவர் பேசியதாவது:
காத்தாடி திருவிழாவை கொண்டாட, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இத்திருவிழாவில், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
உலக காத்தாடி சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற கிரீஸ் நாட்டை சேர்ந்தவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தாண்டு இத்திருவிழாவை பெரியளவில் நடத்த ஆலோசிக்கப்படுகிறது.
மங்களூரு காத்தாடி திருவிழா, விளையாட்டுப் போட்டியாக மாறும் வாய்ப்பு உள்ளது.
உலகிலேயே சிறந்த காத்தாடி பறக்கும் இடங்களில் மங்களூரின் தண்ணீர் பாவி கடற்கரை, முக்கியமான இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இத்திருவிழாவில், கதகளி, யக் ஷகானா, புஷ்பக விமானம், கஜராஜ கருடன், இந்திய ஜோடி பெயரில், ஒடிசா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, தெலங்கானா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகளும்; இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன், இந்தோனேசியா, போர்ச்சுக்கல் ஆகிய சர்வதேச நாடுகளை சேர்ந்த அணிகளும் பங்கேற்றுள்ளன.

