ADDED : பிப் 05, 2025 06:45 AM

ம.ஜ.த., எனும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை முன்னாள் பிரதமர் தேவகவுடா உருவாக்கினார். ஆரம்ப காலத்தில், மாநிலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. 1994ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த கட்சியின் துணையுடன், 2004ல் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது.
கடந்த 2006ல் காங்., கூட்டணியை உதறி விட்டு பா.ஜ.,வுடன் கை கோர்த்து குமாரசாமி ஆட்சியில் அமர்ந்தார். இதேபோன்று, 2018ல் காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி மீண்டும் முதல்வரானார். இப்படி நேரத்துக்கு தகுந்தவாறு குமாரசாமி மாறிக்கொண்டே இருந்தார்.
பதவி சுகம்
இந்த கால கட்டங்களில் தேவகவுடா மகன்களான குமாரசாமியும், ரேவண்ணாவும் அரசியலில் உச்சத்தை அடைந்தனர். இவர்கள் மட்டுமின்றி இவர்கள் குடும்பத்தினரும் பதவி சுகத்தை அனுபவித்தனர்.
இதனால், கட்சியின் மற்ற தலைவர்கள், ம.ஜ.த.,விலிருந்து வெளியேறினர். மற்ற கட்சிகளுக்கு தாவி, பெரிய பதவிகளை பெற்று உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கவர் தற்போதைய முதல்வரான சித்தராமையா. இந்த வரிசையில் மது பங்காரப்பா, செலுவராயசாமி, ஜமீர் அகமது கான் என பலர் உள்ளனர்.
இப்படி இருந்த கட்சியின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. இறுதியாக 2023 சட்டசபை தேர்தலில், 19 எம்.எல்.ஏ., க்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.ஜ.த.,வின் குமாரசாமி, மத்திய அமைச்சராகி விட்டார். கடந்த லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதியில் துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் தோற்றதிலிருந்து, ம.ஜ.த.,வை ஒழிப்பதை, சகோதரர்கள் இருவரும் லட்சியமாக கொண்டுள்ளனர்.
ம.ஜ.த.,வின் கோட்டையான பழைய மைசூரை கைப்பற்ற சிவகுமார் பல வேலைகள் செய்து வருகிறார். முதல் கட்டமாக, சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடாவுக்கு குறி வைத்து உள்ளார்.
லிஸ்ட் தயாரிப்பு
இவர் போன்று, பழைய மைசூரு பகுதியை சேர்ந்த மேலும் நான்கு எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்க, காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுபோன்று கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ.,க்களுக்கும் பேரம் பேசப்படுகிறது. ஒரு சிலர், நல்ல 'டீல்' அமைந்தால் கட்சி தாவ தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
கட்சியில் உள்ள பெரிய பதவிகளை, தங்கள் குடும்பத்திற்கு உள்ளேயே பகிர்ந்து கொள்வதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, மூன்று தடவை தேர்தலில் தோல்வி அடைந்த நிகில் குமாரசாமிக்கு மாநில தலைவர் பதவியை அளிக்க திட்டமிடுவதால், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போதைய மாநில தலைவர் குமாரசாமி, மூத்த தலைவர்களிடம் சமாதானம் பேசி வருகிறார். இருப்பினும், எம்.எல்.ஏ.,க்கள் விலை போவரா, இல்லையா என்பது புதிய தலைவர் நியமனத்துக்கு பின்னரே தெரிய வரும் - நமது நிருபர் -.