தேசிய மாநாட்டு கட்சி முஸ்லிம் கட்சியா? என்ன சொல்கிறார் உமர் அப்துல்லா
தேசிய மாநாட்டு கட்சி முஸ்லிம் கட்சியா? என்ன சொல்கிறார் உமர் அப்துல்லா
UPDATED : அக் 19, 2024 04:29 PM
ADDED : அக் 19, 2024 04:26 PM

ஜம்மு: ''தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி என சொல்கின்றனர். ஆனால், ஹிந்து மதத்தை சேர்ந்தவரை நாங்கள் துணை முதல்வர் ஆக்கி உள்ளோம்,'' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா பேசியதாவது: தேர்தல் முடிவு வந்த போது, எங்களின் நலன் விரும்பிகள் சிலர், ஜம்முவில் இருந்து தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர் யாரும் வெற்றி பெறாததால், அந்த பகுதி புறக்கணிக்கப்படும் என வதந்தி பரப்பினர். ஆனால், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைவருக்காகவும் ஆட்சி செய்வோம் என பதவியேற்ற நாள் முதல் நான் கூறி வருகிறேன். எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்காகவும் பணியாற்றுவோம்.
எங்கள் கட்சியை சேர்ந்தவரை துணை முதல்வராக ஆக்கி உள்ளோம். தேர்தலின் போது, தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி. காஷ்மீரிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஜம்முவை சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்காது என சிலர் கூறினர். துணை முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரை அந்த பதவியில் நியமித்து உள்ளோம். அவர் ஜம்முவை சேர்ந்தவர். அதிலும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர். அவருக்கும், எனது குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய மாநாட்டு கட்சியை முஸ்லிம் கட்சி எனக்கூறியவர்களுக்கு நாங்கள் அளிக்கும் பதில் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.