sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ்., அமைப்பு?

/

பெங்களூரு குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ்., அமைப்பு?

பெங்களூரு குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ்., அமைப்பு?

பெங்களூரு குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ்., அமைப்பு?


ADDED : மார் 04, 2024 07:14 AM

Google News

ADDED : மார் 04, 2024 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சிரியா நாட்டில் இயங்கி வரும் ஐ.எஸ்., அமைப்பு இருக்கலாம் என, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூரு, மாரத்தஹள்ளி அடுத்த ப்ரூக்பீல்டில், 'ராமேஸ்வரம் கபே' உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த 1ம் தேதி மதியம் 12:55 மணிக்கு குண்டுவெடித்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து சி.சி.பி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர், தலையில் வெள்ளை தொப்பி அணிந்தபடியும், முகத்தை முக கவசத்தால் மறைத்தபடியும் தப்பிச் செல்லும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. ஆனால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை.

பொட்டாசியம் நைட்ரேட்


காலை 11:30 மணிக்கு உணவகத்திற்கு வந்தவர், 11:50 மணிக்கு அங்கிருந்து வெளியேறி உள்ளார். அவர் சென்ற ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் கழித்து, குண்டுவெடித்துள்ளது. தப்பிச் சென்றபோது, கையில் அணிந்திருந்த வாட்சில் அடிக்கடி மணியை பார்த்தபடி இருந்த காட்சிகளும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

இதனால் குண்டை வெடிக்க வைக்க, சரியான நேரத்தை 'பிக்ஸ்' செய்துவிட்டு சென்றதாக கருதப்படுகிறது. வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட துகள்களை, தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு எடுத்துச் சென்று, பரிசோதனை செய்ததில், பொட்டாசியம் நைட்ரேட் கலந்து தயாரித்ததும் தெரிய வந்துள்ளது.

உணவகத்திற்கு வந்தபோது, ஒரு கிலோ மீட்டர் துாரம் நடந்து வந்துள்ளார். ஆனால் உணவகத்தில் இருந்து வெளியே சென்ற பின்னர், வெறும் 100 மீட்டர் துாரம் தான் நடந்துள்ளார். பஸ்சில் ஏறி தப்பிச் சென்றாரா, வேறு யாராவது அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றனரா என்பதில், இன்னும் மர்மம் நிலவுகிறது.

குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கர்நாடகா போலீசார், அந்த மாநில போலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

இதற்கிடையில், 2014ல் பெங்களூரு சர்ச் தெரு, 2022ல் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை நிகழ்த்தியது, தலா ஒரேயொரு நபர் தான். அதேபோல் 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் ஒரேயொரு நபர் தான். மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களும் கிட்டத்தட்ட, ஒரே மாதிரியாக தான் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் கணித்துள்ளனர்.

அந்த வகையில் சர்ச் தெரு, மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்புக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

உணவகத்தில் சோதனை


இந்தத் தாக்குதலையும் ஐ.எஸ்., அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என்று சி.சி.பி., போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக, பெங்களூரு போலீஸ் கமிஷனர், எட்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர்களுடன், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர், ''குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் இருந்து, முழு தகவலையும் பெற்று உள்ளேன். குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர் பற்றி தடயம் கிடைத்து உள்ளது. கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார்,'' என்றார்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நான்கு பேரையும், சி.சி.பி., போலீசார், ஆடுகோடிக்கு அழைத்துச் சென்றனர். தனி இடத்தில் வைத்து, துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாச கவுடா, லட்சுமி பிரசாத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நேற்று மாலை குண்டுவெடித்த உணவகத்திற்குச் சென்று, சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர். குண்டுவெடித்தபோது பணியில் இருந்த, ஊழியர்களிடம் விசாரித்தனர்.

என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு

இதற்கிடையில் சிக்கமகளூரில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ''பெங்களூரு குண்டுவெடிப்பை வழக்கை, அரசு எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது தீவிரமான விஷயம். மக்களுக்கு பாதுகாப்பு முக்கியம். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வைத்தவர் இன்னும் சிக்கவில்லை. இந்த வழக்கை தேவைப்பட்டால் என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பிடம், ஒப்படைப்பது பற்றி யோசிப்போம். பெங்களூருவை 'பாம் பெங்களூரு' என, பா.ஜ., தலைவர்கள் விமர்சிப்பது சரியல்ல. பா.ஜ., ஆட்சியில் தான், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் முன் குண்டுவெடிப்பு நடந்தது. அதற்கு நாங்கள் என்ன பெயர் வைப்பது?'' என்றார்.துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் உள்ளது. அங்கு பயன்படுத்தப்பட்ட வெடிப் பொருட்கள், இங்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மங்களூரு, ஷிவமொகாவில் இருந்து, போலீஸ் அதிகாரிகள், பெங்களூரு வந்து உள்ளனர். குண்டு வைத்தவர் பயணம் செய்த, பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடந்து உள்ளது. இந்த வழக்கை அவ்வளவு எளிதில் நாங்கள் விட மாட்டோம்,'' என்றார்.



பலத்த பாதுகாப்பு

குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, கர்நாடகா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சிக்கமகளூரு மூடிகெரேயில், அரசின் வாக்குறுதித் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கலந்து கொண்டனர். பாதுகாப்பு எதிரொலியாக, விழா மேடை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன், போலீசார் அடிக்கடி சோதனை நடத்தினர்.



பன்னரகட்டாவில் தீவிர சோதனை

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, பெங்களூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு வருவோர், தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணியர் பைகளை, மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் பரிசோதனை செய்கின்றனர்.



கடிதம் வந்தால் உஷார்

பெங்களூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இரண்டு முறை, இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், அது புரளி என்று தெரிந்தது. இனி ஏதாவது வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தால், உஷாராக இருக்கும்படி போலீசாருக்கு, அரசு உத்தரவிட்டு உள்ளது. 'புரளி என்று நினைத்து அலட்சியமாக விட்டுவிட்டால், பெரிய இழப்பை சந்திக்க நேடும்' என, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், போலீஸ் அதிகாரிகள் அலர்ட் ஆகி உள்ளனர்.



மருத்துவ கல்வி அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் கூறுகையில், ''மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க சிலர் விரும்புகின்றனர். இதை எங்கள் அரசு அனுமதிக்காது. வளர்ச்சியே எங்கள் குறிக்கோள். இதுபோன்ற 'சில்லி கேஸ்'களை கண்டு கலங்க மாட்டோம்,'' என்றார்.குண்டுவெடிப்பு வழக்கை சில்லி கேஸ் என்று கூறியதால், அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீலுக்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கர்நாடகா பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில், 'விதான்சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது, குண்டுவெடிப்பில் 10 பேர் காயம் அடைவது, இது எல்லாம் சில்லி கேஸ்களா? வெடிகுண்டு வைப்பவர்களை சகோதரர்கள் என்று கூறும், உங்கள் முட்டாள்தனத்திற்கு, கர்நாடகா மக்கள் பதிலடி கொடுப்பர்' என்று கூறப்பட்டு உள்ளது.








      Dinamalar
      Follow us