வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் நம்பர் கட்டாயம்?
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் நம்பர் கட்டாயம்?
ADDED : செப் 25, 2025 03:38 AM

புதுடில்லி: 'வாக்காளர் பட்டியலில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பெயர்களை சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனில், ஆதாருடன் இணைக்கப்பட்ட, 'மொபைல் போன்' எண் கட்டாயம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
'கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில், 6,018 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, ஆன்லைன் மூலம் முயற்சிகள் நடந்தன' என, காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக தேர்தல் அதிகாரி அன்புகுமார் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விரிவாக விளக்கம் அளித்தார். அதன் விபரம்:
கடந்த 2022ல், ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் அதிகாரிக்கு, 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்கும்படி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வந்தன.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், இது பற்றி உடனடியாக விசாரிக்கப்பட்டது. களத்திற்கு நேரடியாக சென்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அவற்றில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என்றும் தெரிந்தது. இதனால், அந்த விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டன. மேலும், போலியாக வந்த விண்ணப்ப படிவங்களை அனுப்பியவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் கமிஷன் சார்பில் ஆலந்த் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தரப்பட்டது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆன்லைனில் போலியாக வரும் விண்ணப்பங்களை தவிர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ, திருத்தவோ வேண்டுமெனில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண் தரப்பட வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் கட்டாயமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தேர்தல் கமிஷனின் ஐ.டி., துறை பணியாற்றி வந்ததாகவும், ஆன்லைனில் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கோரும் திருத்தம் தற் போது மேம்படுத்தப்பட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது.