பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா? ஓட்டுச்சாவடி முகவர்கள் உதவ அறிவுரை!
பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா? ஓட்டுச்சாவடி முகவர்கள் உதவ அறிவுரை!
ADDED : மார் 18, 2024 05:32 AM

பெங்களூரு : ''வாக்காளர்கள், தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, ஓட்டுச்சாவடி அளவிலான கட்சிகளின் முகவர்கள் உதவ வேண்டும்,'' என மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று சேஷாத்திரிபுரத்தில் நடந்தது.
விழிப்புணர்வு
மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா பேசியதாவது:
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள, ஓட்டுச்சாவடி அளவிலான கட்சிகளின் முகவர்கள் முன்வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஏனெனில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்காளர் தகவல்களை நன்கு அறிந்திருப்பர். அவர்களின் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட விஷயங்களுக்கு, வாக்காளர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது, தேர்தலின் போது எந்த பிரச்னையும் இன்றி ஓட்டு போட வசதியாக இருக்கும்.
செயலிகள்
லோக்சபா தேர்தலுக்காக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல செயலிகளை, தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது.
குறிப்பாக 'வாக்காளர் உதவி லைன்' செயலி, வாக்காளர்களுக்கு உகந்ததாக இருக்கும். இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரியை சரி பார்த்து கொள்ளலாம்.
தேர்தல் முறைகேடுகளை தடுப்பதில் 'சி - விஜில்' செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் பொதுமக்கள் தங்கள் அடையாளத்தை தெரியப்படுத்தாமல், ஆணையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்காக 'சக் ஷம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்களுக்கு தேவையான வாகனம் அல்லது பிற வசதிகளை முன்பதிவு செய்யலாம். 'சுவிதா செயலி' மூலம் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனு தாக்கல், தள்ளுபடி தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சிகளின் பிரதிநிதிகளும், தங்களின் கருத்துகள், ஆலோசனைகளை வழங்கினர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் வெங்கடேஷ் குமார், கூர்மா ராவ் பங்கேற்றனர்.
அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார். இடம்: சேஷாத்திரிபுரம், பெங்களூரு.

