தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ படைத்தவனுக்கும், படைப்புக்கும் பாகுபாடு இருக்குமா? சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் கேள்வி

 படைத்தவனுக்கும், படைப்புக்கும் பாகுபாடு இருக்குமா? சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் கேள்வி

 படைத்தவனுக்கும், படைப்புக்கும் பாகுபாடு இருக்குமா? சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் கேள்வி


ADDED : ஏப் 21, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- டில்லி சிறப்பு நிருபர் -

'கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்ட பக்தர், தெய்வத்தின் சிலையை தொடுவதற்கு தடை விதித்தால், அவரை காக்க அரசியல் சாசன சட்டம் முன்வராதா? படைத்தவனுக்கும், அவனது படைப்புக்கும் இடையே பாகுபாடு இருக்க முடியுமா?' என, சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரும் வழக்கைத் தொடர்ந்து, மத உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர்பான ஏழு முக்கிய சட்டக் கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி ஆஜராகி வாதாடினார்.

அப்போது, ''ஒரு பக்தர் வழிபாட்டிற்காக கோவிலுக்கு செல்வது என்பது, கர்ப்பகிரஹத்தில் இருக்கும் தெய்வத்தின் இயல்புகளுக்கு முரணாக இருக்காது. ஏனெனில், அவர் கோவிலுக்கு செல்வதன் நோக்கமே தெய்வத்தை வழிபடுவதற்கு தான். அந்த தெய்வீக சக்திக்கு தன்னை முழுதாக அர்ப்பணிக்கிறார். தவிர தெய்வம் மற்றும் வழிபாட்டின் அடிப்படை இயல்புகளை அவர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்,'' என கூறினார்.

அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதி அமானுல்லா, ''கடவுள் தான் நம்மை படைத்தார். அவரின் படைப்பு நான் என ஆழமான நம்பிக்கை கொண்டவன் என்ற அடிப்படையில் நான் கோவிலுக்கு செல்கிறேன் என வைத்துக் கொள்வோம்.

''நுாறு சதவீத நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்க செல்கிறேன். உள்ளத்தில் முழு பக்தி நிறைந்து இருக்கிறது. அவரிடமே முழுதாக நான் சரணடைந்து விட்டேன். அப்படிப்பட்ட என்னை பிறப்பின் அடிப்படையில், கர்ப்ப கிரஹத்திற்குள் இருக்கும் சிலையை தொடக் கூடாது என சொல்கின்றனர். அப்போது பக்தனை காக்க அரசியல் சாசன சட்டம் துணைக்கு வராதா? படைத்தவனுக்கும், படைப்புக்கும் இடையே முரண்பாடு இருக்க முடியுமா?,'' என்றார்.

இதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கிரி முன்வைத்த வாதம்:

தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும்; எந்த மாதிரியான பூஜைகள் நடத்த வேண்டும் என்பதை சாஸ்திரங்கள் உணர்த்துகின்றன. அந்த சாஸ்திரத்தை கற்றவர் தான் அர்ச்சகர். பிறப்பின் அடிப்படையில் மட்டும் அந்த உரிமையை ஒருவருக்கு மறுத்தால், அரசியல் சாசன சட்டப் பிரிவு 25ன் கீழ் அரசு தலையிட்டு அதை சரி செய்ய முடியும்.

ஆனால், சபரிமலை விவகாரத்தில், அங்கு அமர்ந்திருக்கும் தெய்வம் நைஷ்டிக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதாக நம்பப்படுகிறது. அது அந்த தெய்வத்தின் தனிப்பட்ட இயல்பு. அதற்கேற்றபடியே சபரிமலையில் வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் தகுதிகள் என்பது தீண்டாமை ஆகாது. அவை அந்த மதத்தின் நம்பிக்கைகள் சார்ந்தவை. என் மதத்தை கடைப்பிடிக்க அரசியல் சாசன சட்டப் பிரிவு 25 உரிமை அளிக்கிறது. அதே சமயம், சபரிமலைக்கு நான் செல்ல முடியாததற்கு தெய்வத்தின் தனிப்பட்ட இயல்பே காரணமாக இருந்தால், அதை நிச்சயம் கடைப்பிடித்தே தீர வேண்டும். ஏனெனில் அந்த தெய்வத்தின் பிரம்மச்சரிய விரதத்துடன் ஒத்திசைவாக உள்ள நடைமுறை அது.

அதாவது, இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு அல்ல; மாறாக தெய்வத்தின் தனித்துவமான நிலையை பாதுகாக்கும் நிரந்தரமான சடங்கு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. அதே சமயம், அந்த தெய்வத்தின் வழிபாட்டு முறைகளையும், பண்புகளையும் மதித்தே ஆக வேண்டும். தெய்வத்தின் பண்புக்கு முரணாக பக்தன் உரிமை கோர முடியாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் முன்வைத்த வாதம்:

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளை போலவே, மதப் பிரிவுகளுக்கும், தங்கள் விவகாரங்களை நிர்வகிக்க தனித்துவ உரிமை இருக்கிறது.

ஒரு பள்ளி மாணவன், வகுப்பில் இருந்து பாதியில் வெளியேறி, கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், அந்த உரிமை இருப்பதாக கூற முடியாது. ஏனெனில் இங்கே சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு அவசியம்.

அப்படித் தான் வழிபாட்டு முறைகளும், இந்த உரிமைகள் வரம்புக்கு உட்பட்டவை. மத நம்பிக்கையற்றவர்களுக்கு இது அறிவுக்குப் பொருந்தாததாக தோன்றலாம். ஆனால் ஒரு மதப் பிரிவின் நம்பிக்கைகளை நீதிமன்றம் அறிவுக்குப் பொருந்தாதது என்று ஒதுக்கிவிட முடியாது.

பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. அதன்படி சேர்க்கையும் அவசியம். ஆனால், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான மாணவர்களை சேர்க்க அரசியல் சாசன சட்டம் தனி அதிகாரத்தை வழங்கி இருக்கிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எப்படி சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளதோ, அதே போல் பிரிவு 26ன் கீழ் மதப் பிரிவுகளும் தங்களது விவகாரங்களை நிர்வகிக்க முழு சுதந்திரம் உண்டு.

தீண்டாமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறை போன்ற அரசியல் சாசன சட்டத்தால் தடை செய்யப்பட்ட செயல்களுக்கு மதத்தின் பெயரால் ஒருபோதும் அனுமதி கோர முடியாது.

ஆன்மிகம் சாராத நீதிமன்றங்கள், ஒரு மதத்தின் சடங்குகள் அத்தியாவசியமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க கூடாது. முடிவெடுக்கும் அதிகாரத்தை அந்த மதப் பிரிவிடமே ஒப்படைக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் சமூக சீர்திருத்தத்தின் மிகப் பெரிய ஆதரவாளர். அவர் ஒருபுறம் சமத்துவத்தை நிலைநாட்ட போராடினார். மறுபுறம் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க விரும்பினார். இந்த இரண்டுக்கும் இடையிலான முரண்பாடுகளை களைந்து, அரசியல் சாசன சட்டத்திற்குள் அதை கச்சிதமாக பொருத்தியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து இவ்வழக்கு விசாரணை நாளையும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us