வயநாடு இடைத்தேர்தல் ஓட்டு இயந்திரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லையா: பா.ஜ., கேள்வி
வயநாடு இடைத்தேர்தல் ஓட்டு இயந்திரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லையா: பா.ஜ., கேள்வி
ADDED : நவ 23, 2024 04:59 PM

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து விமர்சித்த சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், முதலில் இழுபறி நீடித்து வந்தாலும், பிறகு ஆளும் மஹாயுதி கூட்டணி 221 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ., 131 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி 55 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
அதேபோல, இண்டியா கூட்டணி வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதன்மூலம், மாபெரும் வெற்றியுடன் மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத், 'மஹாயுதி கூட்டணி தேர்தல் முடிவுகளில் குளறுபடிகளை செய்துள்ளது. எங்கள் தொகுதிகளை அவர்கள் திருடி விட்டனர். இது மக்கள் முடிவு அல்ல. மக்களே இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏக்நாத் ஷிண்டே 50 சீட்டுகளையும், அஜித் பவார் 40 சீட்டுகளையும், பா.ஜ., 130 சீட்டுகளையும் பெற வாய்ப்பு இருக்கிறதா' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஷெஷாத் பூனவல்லா கூறியதாவது: எப்போது எல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கிறார்களோ, அப்போது எல்லாம் இது மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். சஞ்சய் ராவத் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஜோக்கரைப் போல பேசி வருகிறார். வயநாட்டிலும், ஜார்க்கண்டிலும், ஜம்மு காஷ்மீரிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் எந்த கோளாறும் இல்லையா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.