மனு தாக்கல் செய்யும் முறையா இது? வக்கீல்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
மனு தாக்கல் செய்யும் முறையா இது? வக்கீல்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
ADDED : ஏப் 23, 2025 01:32 AM
புதுடில்லி,:'செய்தியில் பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர்கள் பொதுநல மனு தாக்கல் செய்யக்கூடாது' என, இரண்டு வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது தொடர்பாக, விஷால் திவாரி மற்றும் சஷாங்க் சேகர் ஜா என்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அரசியலமைப்பு 32 தொடர்பாக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யும்போது அதிக கவனம் தேவை.
அந்த மனு நீதிமன்றத்தின் கண்ணியத்தை காப்பதாக இருக்க வேண்டும். செய்தியில் இடம் பெறுவதற்காக மனு தாக்கல் செய்யக்கூடாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மனுவை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி வழக்கறிஞர் விஷால் திவாரி முன்வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர்.
அதேநேரம், ''மனுவை திரும்பப் பெற விரும்பவில்லை,'' என, வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதி சூர்யகாந்த், வழக்கறிஞர் ஜா இடையே நடந்த விவாதம் வருமாறு:
நீதிபதி: உங்களுக்கு எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது? எத்தனை பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளீர்கள்?
வக்கீல்: ஏழு ஆண்டு அனுபவம் உள்ளது, 3 - 4 பொதுநல மனு தாக்கல் செய்துள்ளேன்.
நீதிபதி: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32 தொடர்பான மனு எவ்வாறு எழுதப்பட வேண்டும்?
வக்கீல்: அடிப்படை உரிமை பறிக்கப்படும் போது, 32வது சட்டப்பிரிவு செயல்படுத்தப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பலர் இது தொடர்பாக என்னை அணுகினர். அங்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
நீதிபதி: உங்களிடம் முறையிட்டவர்கள் எங்கே? அவர்களை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்?
வக்கீல்: என்னிடம் முறையிட்டவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறேன்.
நீதிபதி: மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு தோல்வி அடைந்ததாக வலியுறுத்த நினைத்தால், அதை சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவரிக்க வேண்டும். நம் முன் இல்லாத நபர்கள் மீது குற்றம் சுமத்தும் முன், அவர்களை வழக்கில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு வாதம் நடந்தது.
இதை தொடர்ந்து வழக்கறிஞர் சஷாங்க் ஜா மனுவை திரும்பப் பெற்றார்.