பரவுகிறதா வைரஸ் காய்ச்சல்? கணக்கெடுக்கிறது சுகாதாரத்துறை
பரவுகிறதா வைரஸ் காய்ச்சல்? கணக்கெடுக்கிறது சுகாதாரத்துறை
ADDED : செப் 04, 2025 03:57 AM

சென்னை: ''தமிழகத்தில், புதிய வகை வைரஸ் பரவல் இல்லை என்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக, வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால், இந்த காய்ச்சல் பரவி வருவதாக கூறப்பட்டது.
காலநிலை மாற்றம் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகர பகுதிகளில், இப்பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வும் ஏற்படுவதால், இக்காய்ச்சல் பாதிப்பின் தன்மையை கண்டறிவதற்கான பரிசோதனையை தீவிரப்படுத்த, பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, பரிசோதனை முடிவை விரைந்து அளித்து, பாதிப்புக்கு ஏற்ப உடனடி சிகிச்சை அளிப்பதுடன், காய்ச்சல் பாதிப்பு குறித்து தெரிவிக்கும்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:
காலநிலை மாற்றம், மழை காரணங்களால் வைரஸ் பரவ உகந்த நிலை இருக்கிறது. இதனால், வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இருமல், காய்ச்சல், தலைவலி, சளி, உடல்வலி, உடல் சோர்வு ஆகியவை வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்.
கண்காணிப்பு குறிப்பாக, முதியவர் களை அதிகம் பாதிக்கிறது. சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் எத்தனை பேர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என, கணக்கெடுக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதுவரை மக்கள் அச்சப்படும் வகையிலான காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. அதேநேரம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவதுடன், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
இருமலின்போது, அடுத்தவர் மீது பரவாதவாறு கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் அதேநேரம், அனைவரும் முகக்கவசம் அணியவது கட்டாயம் இல்லை. பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் அணிவது நல்லது. காய்ச்சல் பாதித்தவர்கள், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.