ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
ADDED : ஜூலை 21, 2025 12:46 PM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஜிகாதி ஸ்டெயிலில் சிறுமிகளை குறிவைத்து மதமாற்றம் செய்து வந்த கும்பலை ஆக்ரா போலீசார் கைது செய்தனர்.
ஹிந்து பெண்களை குறிவைத்து மதமாற்றம் செய்து வந்த சாங்கூர் பாபா கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதமாற்றம் செய்வதற்காக ரூ.500 கோடி வரையில் முஸ்லிம் நாடுகளிடம் இருந்து பணம் பெற்றது தெரிய வந்தது. முன்னதாக, உத்தரபிரதேசத்தில் 2021ம் ஆண்டு முதல் கட்டாய மதமாற்ற வழக்குகளில் மவுலானா உமர் கௌதம், மவுலானா கலீம் சித்திக் ஆகியோர் தொடர்புடைய மதமாற்ற கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
மதமாற்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடும் கும்பலை பிடிக்க 'ஆபரேஷன் ஆஸ்மிதா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் ஆஸ்மிதா மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., பாணியில் ஜிஹாதி முறையில் பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்து வந்த கும்பலை ஆக்ரா போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சிறுமிகளை குறிவைத்தே இந்த மதமாற்றம் செயல் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆக்ராவின் சதார் பஜார் போலீஸ் ஸ்டேஷனில் இரு சகோதரிகள் காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிதியுதவியுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, லண்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வந்த குழுக்களின் ஆதரவுடன் இந்த மதமாற்ற கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. யூடியூப் சேனல்கள், ஆன்லைன் பிரசாரங்களின் மூலம் ஹிந்து சிறுமிகள் மிரட்டப்பட்டு, மதமாற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதமாற்றம் செய்யப்படும் பெண்கள் பஸ் மூலம் பிற மாநிலங்களுக்கு ரகசியமாக கொண்டு செல்லப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த மதமாற்ற கும்பலுக்கு கனடாவில் உள்ள சையத் தாவூத் அகமது நிதி அனுப்பியதாகவும், கோவாவைச் சேர்ந்த ஐஷா, இந்தியாவில் பணத்தை விநியோகித்ததாகவும் கூறப்படுகிறது. கோல்கட்டாவில் ஹசன் அலி என்பவர் இந்த கும்பலின் சட்ட ஆலோசகராக செயல்பட்டு, மதமாற்றத்திற்கான ஆவணங்களை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆக்ராவில் அப்துல் ரஹ்மான் குரேஷியும், கோல்கட்டாவில் ஒசாமா போன்றவர்கள் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.