தற்கொலை படை தாக்குதலுக்கு திட்டம் டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது
தற்கொலை படை தாக்குதலுக்கு திட்டம் டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது
ADDED : அக் 25, 2025 02:57 AM

புதுடில்லி: டில்லியில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயிற்சி பெற்று வந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை சிறப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தலைநகர் டில்லியில் உள்ள சாதிக் நகர் மற்றும் மத்திய பிரதேச தலைநகர் போபாலில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, சாதிக் நகர் மற்றும் போபாலில், இரு மாநில போலீசாரும் சமீபத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், டில்லியில் பதுங்கி இருந்த ஐ.எஸ்., பயங்ரகவாதிகள் இருவரை சிறப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், இருவரது பெயரும் அத்னான் என்பதும், போபாலைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கைதான இருவருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளது. டில்லியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டி உள்ளனர்.
தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும், ஐ.இ.டி., எனப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டை தயாரிக்கவும் அவர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கைது மூலம், பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன், அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் நெட்வொர்க், சதி திட்டத்துக்கான நோக்கம் உள்ளிட்டவை குறித்து விசாரித்து வருகிறோம். இதில் சம்பந்தப்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

