பயங்கரவாதத்தை எதிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்; இஸ்ரேல் அழைப்பு
பயங்கரவாதத்தை எதிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்; இஸ்ரேல் அழைப்பு
ADDED : செப் 09, 2025 07:00 AM

புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சர் பெலேல் ஸ்மோட்ரிக் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இஸ்ரேல் நிதியமைச்சர் பெலேல் ஸ்மோட்ரிக், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். தலைநகர் டில்லியில் நிகழ்ந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சந்திப்புக்கு பின்னர், இஸ்ரேல் நிதியமைச்சர் பெலேல் ஸ்மோட்ரிக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஜெருசலேமில் பஸ்சில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை குறிப்பிட்டு பேசினார். அவர் தொடர்ந்து கூறியதாவது;
நாங்கள் (நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன்) இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது ஜெருசலேமில் பஸ்சில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம், எனக்கு பஹல்காம் தாக்குதலை நினைவுக்கு வந்தது. மேலும் அந்த தாக்குதல் சம்பவம் அக்.7ம் தேதி 2023ம் ஆண்டு ஹமாஸ்-இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலில் 1200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை நினைவூட்டியது.
ஜனநாயகம், பேச்சுரிமை, மத சுதந்திரம் போன்றவற்றுடன் ஒரு மனிதன் இந்த உலகில் வாழ சுதந்திரம் அனுமதிக்கிறது. இவை அனைத்திற்கும் எதிராக போராடும் தீய சக்திகளுக்கு (பயங்கரவாதம்) எதிரான போரில் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.
ஏன் என்றால், அந்த தீய சக்தி ஒருநாள் உங்களை தாக்கும். மறுநாள் அது என்னையும் தாக்கும். ஒருநாள் ஐரோப்பா அல்லது அமெரிக்காவை தாக்கும்.
இவ்வாறு அமைச்சர் இஸ்ரேல் நிதியமைச்சர் பெலேல் ஸ்மோட்ரிக் கூறினார்.