10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை: நாளை புனேயில் ஆட்தேர்வு நடத்துகிறது இஸ்ரேல்
10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை: நாளை புனேயில் ஆட்தேர்வு நடத்துகிறது இஸ்ரேல்
ADDED : செப் 15, 2024 11:18 AM

புதுடில்லி: இஸ்ரேல் நாட்டில் கட்டுமான துறையில் 10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்குவதற்கான ஆட்தேர்வு புனேயில் நாளை துவங்குகிறது.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனியர்கள் பலர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலை அனுமதியையும் இஸ்ரேல் ரத்து செய்தது. இதனால் பல்வேறு துறைகளில் அங்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
கட்டுமானத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை போக்க இந்தியாவில் இருந்து ஆட்களை தேர்வு செய்யப்போவதாக இஸ்ரேல் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் கட்டுமானத் துறையில் திறமை வாய்ந்த 10 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நாளை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் துவங்க உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் ப்ரேம்வொர்க், இரும்பு வளைத்தல், பிளாஸ்டரிங் மற்றும் செராமிக் டைலிங் ஆகிய பிரிவுகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மேலும் சுகாதாரத்துறையில் இந்தியாவில் இருந்து பராமரிப்பாளர்கள் (care givers) 5 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 990 மணி நேரம் படித்து பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆட்களை தேர்வு செய்யும் பணியை பார்வையிட அடுத்த வாரம் இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் இந்தியா வர உள்ளனர். இந்தியா- இஸ்ரேல் நாட்டு அரசுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்த ஆட்கள் தேர்வு நடக்கிறது.