ADDED : ஆக 22, 2025 12:40 AM
புதுடில்லி: ''இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம், வரும் டிசம்பரில் செயல் படுத்தப்படும்,'' என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இந்திய வானியல் ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பாக, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டம் கருதப்படுகிறது. இதற்காக, விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவரான, நம் விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, சமீபத்தில், அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலை யத்துக்கு சென்று திரும்பினார்.
இந்நிலையில், தன் விண்வெளி அனுபவம் குறித்து, டில்லியில் செய்தியாளர்களிடம் சுக்லா நேற்று விவரித்தார்.
அவருடன், 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் மற்றும் 'ககன்யான்' திட்டத்தில் சுக்லாவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரரான குரூப் கேப்டன் பாலகிருஷ்ணன் நாயர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அனைவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் கூறுகையில், “இந்தியா தன் முதல் முயற்சியான, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை, வரும் டிசம்பரில் செயல்படுத்த தயாராக இருக்கிறது.
“நம் நாட்டின் சார்பாக விண்வெளியில் தேசிய விண்வெளி நிலையத்தை நிறுவுவது, வரும் 2040க்குள் சந்திரனில் தரை இறங்குவது உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களுக்கு இது அடிப்படையாக அமையும்,” என்றார்.
இதற்கிடையே, 'ககன்யான்' திட்டம் வாயிலாக, வரும் டிசம்பரில் விண்வெளிக்கு செல்லும், சுக்லா உட்பட நான்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கு, அக்டோபரில் பயிற்சி துவங்குகிறது.