ADDED : மார் 05, 2024 01:09 AM

புதுடில்லி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுஉள்ளதாவது:
சந்திரயான் - 3 விண்கலம் ஏவப்படும்போது எனக்கு வயிற்று வலி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புற்றுநோய்க்கான அறிகுறிகளும் தென்பட்டன; எனினும், அப்போது நோயின் பாதிப்பு குறித்து தெளிவான புரிதல் இல்லை.
ஆனால், கடந்த ஆண்டு சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் - 1 விண்கலம், விண்ணில் ஏவப்பட்ட அன்று வயிற்று வலியால் அவதியடைந்ததால் பரிசோதனை மேற்கொண்டேன்; அதில், இரைப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அடுத்த நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டேன். கீமோதெரபி சிகிச்சை வாயிலாக புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. ஐந்தாவது நாள் வலியின்றி, மீண்டும் பணிக்கு திரும்பினேன். தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

