40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ADDED : ஆக 19, 2025 06:18 PM

ஹைதராபாத்: மொத்தம் 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை இஸ்ரோ தயாரிக்கிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது: 40 மாடி கட்டடத்திற்கு சமமான, ஒரு பெரிய ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. இது 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.
தற்போது, இந்தியா 55 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் இயக்கி வருகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஹைதராபாத்தில் நிருபர்கள் சந்திப்பில், இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: நிசார் செயற்கைக்கோள் அற்புதமாக சிறப்பாக செயல்படுகிறது.
இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு பெருமையான தருணம். சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக திரும்பி வந்துள்ளார். அவரது அனுபவம் நமது ககன்யான் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.