விண்வெளியில் இந்தியாவின் ரோபாட்டிக் கைகள்; மைல்கல் என இஸ்ரோ பெருமிதம்
விண்வெளியில் இந்தியாவின் ரோபாட்டிக் கைகள்; மைல்கல் என இஸ்ரோ பெருமிதம்
ADDED : ஜன 04, 2025 12:33 PM

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ரோபாட்டிக் கைகள் செயல்பாட்டை துவங்கின என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தையும், வரும் 2035ல் விண்வெளியில் விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு, பல செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை முயற்சிக்காக தற்போது தலா, 220 கிலோ எடையில், ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி ஆகிய இரு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
அவற்றுடன் இஸ்ரோவின், 14 ஆய்வு கருவிகள் மற்றும் கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள 10 ஆய்வு கருவிகள் ஆகியவற்றை சுமந்தபடி, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி60 ராக்கெட், ஆந்திர மாநிலம், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்கள், 15வது வினாடியில், ஸ்பேடெக்ஸ் - பி செயற்கைக்கோளை திட்டமிட்டபடி, 476.84 கி.மீ., உயரமுள்ள புவி வட்டப்பாதையில் ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதை தொடர்ந்து, 476.87 கி.மீ., உயரமுடைய வட்டப் பாதையில் ஸ்பேடெக்ஸ் - ஏ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜன.,04) பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் குறித்து ஒரு வீடியோ ஒன்றை இஸ்ரோ சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும்,'பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ரோபாட்டிக் கைகள் செயல்பாட்டை துவங்கின. விண்வெளியில் செயல்படும் இந்தியாவின் முதல் ரோபாட்டிக் கைகள். இது ஒரு மிகப்பெரிய மைல்கல்' என இஸ்ரோ தெரிவித்துள்ளது.