விண்வெளியில் முளைத்த காராமணி இஸ்ரோ சோதனை முயற்சி வெற்றி
விண்வெளியில் முளைத்த காராமணி இஸ்ரோ சோதனை முயற்சி வெற்றி
ADDED : ஜன 04, 2025 11:59 PM

பெங்களூரு: குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற பரிசோதனைக்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி வெற்றிகரமாக முளைத்துள்ளது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச., 30ம் தேதி விண்ணில் பாய்ந்தது.
தற்போது பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.
இதில், பி.ஓ.இ.எம்., 4 எனப்படும் சுற்றுவட்டப் பாதை பரிசோதனை அமைப்பில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் எட்டு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.
அவை முளைத்து துளிர் விடும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவின் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்த சாதனை மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட கால விண்வெளி பயணத்தின் போது பயன்படலாம் என்கின்றனர்.
இதன் புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோ கூறுகையில், 'விண்வெளியில் உயிர் துளிர்த்துள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் பி.ஓ.இ.எம்.,மில் நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. நான்கு நாட்களில் விதை துளிர்விட்டுள்ளது. மேலும் வளரும் என எதிர்பார்க்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.