சுரங்க தொழிலாளர் வீடுகளுக்கான 'உடைமை' சான்றிதழ் 27ல் வழங்கல்
சுரங்க தொழிலாளர் வீடுகளுக்கான 'உடைமை' சான்றிதழ் 27ல் வழங்கல்
ADDED : பிப் 22, 2024 11:25 PM
தங்கவயல்: தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர்கள் வசித்து வரும் வீடுகளுக்கு, உடைமை சான்றிதழ்கள், இம்மாதம் 27ம் தேதி வழங்கப்படுகிறது.
தங்கச் சுரங்கத்தை மூடும் போது ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்கள் 3,200 பேர் குடியிருக்கும் வீடுகளுக்கு பொசிஷன் சர்டிபிகேட் என்ற உடைமை சான்றிதழ்களை கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்க, மத்திய சுரங்கத் துறை அமைச்சக செயலர் பரிதா எம். நாயக் என்பவர் வந்திருந்தார்.
தொழிலாளர் குடியிருக்கும் பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரமும் செய்தனர். அப்போது 44 தொழிலாளர்களுக்கு மட்டுமே கொடுத்தனர்.
இதற்கிடையில், கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி, உடைமை சான்றிதழ் வழங்குவதில் சில குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்து, அதனை வழங்க விடாமல் தடுத்தார்.
சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி, சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி படம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரண்டு மாதங்கள் ஆகியும் சான்றிதழ் விவகாரம் கிணற்றில் விழுந்த கல்லாக இருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவர இருப்பதால் அதற்குள்ளாக சான்றிதழ் வழங்க முன் ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.
டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கு வீடுகளுக்கான உடைமை சான்றிதழை வரும் 27ம் தேதி, கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி தலைமையில், சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இத்தகவல் முன்னாள் தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.