ADDED : ஜன 20, 2025 01:55 AM

பெங்களூரு : கர்நாடகாவில், ஐ.டி., பணியாளருக்கு மொபைல் போனை பரிசாக கொடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்த 2.80 கோடி ரூபாயை நுாதன முறையில் திருடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில், சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. கடந்த நவம்பர் மாதம், இங்குள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை, மொபைல் போன் வாயிலாக மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
'உங்களது சிபில் ஸ்கோர் நன்றாக உள்ளது. இதனால், உங்களுக்கு அதிக ரூபாய் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டுடன், புதிய மொபைல் போன் பரிசாக தரப்படும்' என, கூறி உள்ளார்.
புதிய மொபைல் போனில், புதிய சிம் கார்டு தான் உபயோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் முதல் வாரத்தில், ஐ.டி., பணியாளர் வீட்டுக்கு, 'ரெட்மீ' நிறுவனத்தின் மொபைல் போன் பார்சலில் வந்துள்ளது.
அவரும் ஆனந்தமாக, புது சிம் கார்டு வாங்கி, அந்த போனை பயன்படுத்தி வந்தார்.
ஐ.டி., பணியாளர், தன் வங்கி கணக்கில் 2.80 கோடி ரூபாய் வைத்திருந்தார்.
சில நாட்கள் கழித்து, வங்கியில் பணத்தின் அளவு குறைவதையும், வங்கியில் இருந்து எந்த குறுஞ்செய்தியும் வராததையும் கவனித்து உள்ளார்.
வங்கிக்கு சென்று விசாரித்த போது, அவர் கணக்கில் இருந்த 2.80 கோடி ரூபாய் பணம் மாயமாகி இருந்தது.
அதிர்ச்சி அடைந்தவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனக்கு பரிசாக வந்த மொபைல் போன் பற்றி தெரிவித்தார்.
அந்த மொபைல் போனை போலீசார் சோதனை செய்ததில், அதில் பல சட்டவிரோத செயலிகள் இருந்தது தெரியவந்தது.
இந்த செயலிகள் வாயிலாக அவரது வங்கி கணக்கு விபரங்கள், வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், ஓ.டி.பி., போன்றவற்றை மர்ம நபர்கள் தங்களுக்கு வரும்படி செய்து, பணத்தை மோசடி செய்தது தெரிந்தது.
அவரது வங்கி கணக்கின் பண பரிமாற்றங்களை வைத்து, மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.