ஆங்கிலம் மட்டுமே அறிவை தரும் மொழி என்பது தவறான கருத்து: சந்திரபாபு நாயுடு
ஆங்கிலம் மட்டுமே அறிவை தரும் மொழி என்பது தவறான கருத்து: சந்திரபாபு நாயுடு
ADDED : மார் 18, 2025 04:27 AM

அமராவதி : ''தாய்மொழி வழியாக கல்வி கற்றவர்களே உலகில் சிறந்து விளங்குகின்றனர். ஆங்கிலம் மட்டுமே அறிவைத் தரும் என்பது தவறானது,'' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தமிழக மக்களை, தி.மு.க.,வும், முதல்வரும் தவறாக வழி நடத்துவதாகவும், தாய்மொழி வாயிலாக கல்வி கற்பதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாகவும் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இதற்கிடையே, ஆந்திர துணை முதல்வரும், பா.ஜ., கூட்டணியில் உள்ள ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், சமீபத்தில் பேசியபோது, 'ஹிந்தியை எதிர்க்கும் தமிழக அரசியல்வாதிகள், தங்கள் படங்களை மட்டும் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
'ஹிந்தியில் இருந்து வரும் பணம் வேண்டும்; ஹிந்தி வேண்டாம் என்பது என்ன வகையான லாஜிக்?' என்றார்.
இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திர சட்டசபையில் நேற்று கூறியதாவது:
தாய்மொழி
ஆங்கிலம் மட்டுமே அறிவுக்கு உத்தரவாதமான மொழி என்ற தவறான கருத்து பொதுவாக நிலவு கிறது. மொழி என்பது தொடர்பு கொள்வதற்கு மட்டுமே; மொழியால் அறிவு வளராது.
எந்த மொழியும் வெறுப்புக்குரியது அல்ல என உறுதியாக கூறுகிறேன். ஆந்திராவை பொறுத்தவரை தாய்மொழி தெலுங்கு; ஹிந்தி தேசிய மொழி; ஆங்கிலம் சர்வதேச மொழி. தாய் மொழியில் கல்வி கற்பது எளிது. தாய்மொழி வாயிலாக கல்வி கற்பவர்கள் மட்டுமே உலகில் சிறந்து விளங்குகின்றனர்.
நம் வாழ்க்கையில் எத்தனை மொழியை கற்க முடியுமோ, அத்தனை மொழிகளை கற்கலாம். தேசிய மொழியை கற்றால், டில்லியில் தடையின்றி உரையாடலாம். சிலர் ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
அந்த மொழிகளையும் இங்கேயே கற்க முடிந்தால், வெளிநாடு செல்லும்போது எளிதாக இருக்கும். எனவே, மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியலில் யாரும் ஈடுபட வேண்டாம். அனைவருமே, முடிந்த வரை பல மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.