பீஹாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரம் வெளியிடுவது கட்டாயமல்ல!
பீஹாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரம் வெளியிடுவது கட்டாயமல்ல!
UPDATED : ஆக 11, 2025 07:04 AM
ADDED : ஆக 11, 2025 12:12 AM

'பீஹாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரங்களை தனியே வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. எந்த வாக்காளரின் பெயரும் முன் அறிவிப்பின்றி நீக்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
இதில், உயிரிழந்தோர், புலம் பெயர்ந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவானோர் போன்ற காரணங்களுக்காக, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து, அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மனு தாக்கல் செய்தது.
உத்தரவு இதை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, நீக்கப்பட்ட வாக்காளர் குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்கு பதிலளித்து, தேர்தல் கமிஷன் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னறிவிப்பின்றி எந்தவொரு வாக்காளரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.
வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது.
எந்தவொரு தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது என்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
விளம்பரம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து புலம்பெயர் தொழிலாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நாடு முழுதும் 246 நாளிதழ்களில் ஹிந்தியில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு உதவ, 2.5 லட்சம் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பீஹார் அரசு துறை அதிகாரிகள்.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என்பது, எந்த சட்டத்திலும் இல்லை.
மேலும், என்ன காரணத்திற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டிய அவசியமும் தேர்தல் கமிஷனுக்கு இல்லை.
தனிநபரின் பெயர் விலக்கப்படுவது, வாக்காளர் பட்டியலில் இருந்தே அவரை நீக்குவது என்றாகி விடாது. முழுமையான விபரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த வாக்காளர்களை கொண்டது தான் வரைவு வாக்காளர் பட்டியல்.
வரைவு பட்டியலில் இல்லாதவர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க இன்னமும் அவகாசம் உள்ளது.
வரைவு பட்டியலை வெளியிடும் முன், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்காகவும் காத்திருந்தோம். ஆனால், யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர், ஒரு ஓட்டு! ஒரு நபர், ஒரு ஓட்டு என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கை மீது தாக்குதல் நடத்தும் வகையில் ஓட்டு திருட்டு நடந்துள்ளது. தேர்தல் நியாய மாகவும், நேர்மையாகவும் நடப்பது முக்கியம். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் கமிஷன் வெளிப்படைத்தன்மையை காட்ட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதற்கு, நாட்டு மக்களின் ஆதரவு தேவை. - ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
- டில்லி சிறப்பு நிருபர் -